”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் விதமாக நடிகர் ரஜினிகாந்திற்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட ரஜினி மேடையில் உணர்ச்சிவசமாக பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது
கோவாவின் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. ஒருவாரம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பல்வேறு உலக மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்திய சினிமாவைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களையும் தொடர்ச்சியாக கெளரவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை ரஜினி நிறைவு செய்ததை கெளரவிக்கும் விதமாக அவருக்கு இன்று விருது வழங்கப்பட்டது. தனது மகள் ஐஸ்வர்யா , பேரன் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் ரஜினி இந்த விழாவில் கலந்துகொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். விருதை பெற்றபின் ரஜினி சில நிமிடங்கள் பேசி நன்றியை தெரிவித்தார்.
இந்த விருதை எனக்கு வழங்கி கெளரவித்ததற்கு மத்திய அரசிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய 50 வருட திரை வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்க்கையில் ஏதோ 15 வருடம் போல் இருக்கிறது. காலம் போனதே தெரியவில்லை. காரணம் சினிமாவை நான் அவ்வளவு நேசிக்கிறேன். நடிப்பதை நேசிக்கிறேன். இன்னும் 100 பிறவிகள் எடுத்தாலும் ரஜினிகாந்த் என்கிற நடிகனாகவே நான் பிறக்க ஆசைப்படுகிறேன். என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் , தொழில்நுட்பகலைஞர்கள் முக்கியமாக என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என ரஜினி பேசினார்.






















