”சாதி இப்பவும் இருக்கு தான! மாரி செல்வராஜின் வலிகள்”துருவ் SUPPORT
சாதியை அடிப்படையாக வைத்து மாரி செல்வராஜ் தொடர்ந்து படங்கள் இயக்குவது விமர்சனத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர் கடந்த வந்த கடினமான பாதைகளை அவர் படமாக இருக்கிறார், தமிழ்நாட்டில் இன்னும் சாதி பாகுபாடு இருந்து கொண்டு இருக்கிறது தானே என சப்போர்ட்டுக்கு வந்துள்ளார் துருவ் விக்ரம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. தனது சுய சாதி பெருமையை மாரி செல்வராஜ் பேசுவதாக அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் குவிந்து வருகிறது. தொடர்ந்து சாதி அடிப்படையிலான படங்களை எடுத்து மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ், நான் சாதிக்கு எதிரானவன், ஏனென்றால் மாரி செல்வராஜ் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள். இதுவரை எடுத்த 5 படங்களையும் பார்த்து என்னை அரசாங்கம் பாராட்டியிருக்கிறது, விருதுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தமிழ் சமூகம் என்னை கொண்டாடி வருகிறது. ஒட்டுமொத்த சமூகத்திற்குள் இருக்கும் சாதியை மாற்றவேண்டும் என்பதற்காகவே வேதனையுடன் படங்கள் எடுக்கிறோம். அதற்கு எதிராக சில பேர் பேசத் தான் செய்வார்கள். அதையும் மாற்ற வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது” என பேசியிருந்தார்.
இந்தநிலையில் இந்தியா முழுக்க சாதி பாகுபாடு இருக்கும் போது தமிழ் சினிமாவில் மட்டும் இதுபற்றி அதிக படங்கள் எடுக்கப்படுவது ஏன் என செய்தியாளர் ஒருவர் நடிகர் துருவ் விக்ரமிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், மாரி செல்வராஜ் அவரது வாழ்க்கையில் என்ன வலிகளை அனுபவித்தாரோ அதை படமாக எடுக்கிறார். அவர்கள் விரும்பும்படி ஒரு கலையை படைப்பதற்கு அனைத்து இயக்குநர்களுக்கும் உரிமை இருக்கிறது. இன்றும் இந்தியாவிலும், குறிப்பாக தென் தமிழ்நாட்டிலும் சாதி பாகுபாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இன்றும் நடந்து கொண்டிருக்கும் இந்த விஷயங்கள் பற்றி பேசி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். மக்களுக்கு புரிதலை ஏற்படுத்துவதற்கு சினிமா சிறந்த ஊடகம் என நான் நினைக்கிறேன்” என மாரி செல்வராஜ் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் மீதான நரேட்டிவை மாற்றுவதற்காகத்தான் இந்தப் படம் எடுத்திருக்கிறேன் என மாரி செல்வராஜும் பேசியிருந்தார். இங்கு என்னதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சாதி குறித்துப் பேசிக்கொள்ள மாட்டார்கள். அதனால் அது அப்படியே இருந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு சின்ன சின்ன உரையாடல்களை ஏற்படுத்தி இதிலிருந்து பேசி முடித்துவிட்டால் தீர்ந்துவிடும். ஆனால் அதைச் சேர்த்து சேர்த்து வைக்கும்போது பாம் போல வெடித்துவிடுகிறது என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.




















