தேக்கடி படகு சவாரி மீண்டும் தொடக்கம்! அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!
மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, தேக்கடி ஏரியில் சுற்றுலா படகு சவாரி மீண்டும் துவக்கம். அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியிலும் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு தினந்தோறும், பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் இங்குள்ள ஏரியில், படகு சவாரி மூலம் வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கையை கண்டு ரசிப்பது வழக்கம். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கேரளாவின் பெயர் இல்லாமல் இருக்காது. சீசன் நேரங்களில் மட்டுமல்லாமல் தொடர்ச்சி மலைப்பகுதிகளின் அழகை ரசிக்க எல்லா காலகட்டங்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பெரியார் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள தேக்கடி ஏரியும் கேரளாவின் அழகிய இடங்களில் ஒன்று.
தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். படகு சவாரி செய்ய கேரள வனத்துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 14 கி.மீ தூரம் சென்று திரும்பும் வனத்துறை படகு சவாரிக்கு கட்டணமாக ரூ.255, சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு சவாரிக்கு ரூ.450 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. காலை 7.30, 9.30, 11.15 மணி மற்றும் பிற்பகல் 1.45, 3.30 மணி என ஐந்து டிரிப்புகளில் படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த மே 24ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமானதை அடுத்து, இடுக்கி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. மே 27ம் தேதி வரை தேக்கடியில் படகு சவாரிக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொடர்ந்து ஏரி பகுதியில் மழை பெய்து வந்ததால் பாதுகாப்பு கருதி படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேக்கடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து, நேற்று முன்தினம் முதல் மீண்டும் சுற்றுலா படகு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள் தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.
இதேபோல் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாபயணியருக்கு மீண்டும் அனுமதி வழங்கியதால், இருமாநில சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இருமாநில சுற்றுலாபயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் வரை சுற்றுலாபயணியர் அங்குள்ள அருவில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் கடந்த மாதம், 26ம் தேதி முதல் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு குறைந்ததால், அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் இருமாநில சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சாலக்குடி வனத்துறை வட்டாரத்தில் கூறுகையில் கேரளாவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வந்ததால், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனர்.





















