Kovai Kutralam: ஆர்ப்பரித்து கொட்டும் கோவை குற்றாலம் அருவிகள் - ஒரு டிரிப் போலமா..?
வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடம் இது.
அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர வீடுகள் என ஆச்சரியமான அனுபவங்களை கோவை குற்றாலம் தரக்கூடும். ஒரு நாள் முழுக்க காட்டிற்குள் சென்று வந்த அனுபவத்தோடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து கொட்டும் அருவிகளில் குடும்பத்தோடு குளித்து மகிழ ஏற்ற இடம் இது. கோவை மாவட்டத்தில் குடும்பத்தினர் உடன் அருவியில் குளிக்க வேண்டுமென்றால், கோவை குற்றாலமோ அல்லது கவி அருவி என பெயர் மாற்றப்பட்ட குரங்கு அருவிக்கோ தான் செல்ல வேண்டும். அதிலும் கோவைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரே நீர்வீழ்ச்சி கோவை குற்றாலம் தான்.
கோவை நகருக்கு மேற்கே இயற்கை எழில் கொஞ்சும் சிறுவாணி மலைத் தொடர்களின் அடிவாரத்தில், வனப்பகுதிக்குள் கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை சூழலை ரசிக்க, அதிக செலவு இல்லாத ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்ற இடம் இது. சூழல் சுற்றுலா தலமாக இவ்விடம் உள்ளது. கிடைக்கும் வருமானம் பழங்குடிகளுக்கு செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
கோவை நகரில் இருந்து மேற்குப் பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். பசுமை போர்த்திய விளை நிலங்கள் வழியாக செல்லும் சாலையில் செல்வதே அழகான அனுபவமாக இருக்கும். விளை நிலங்களையும், சிற்றுர்களையும் கடந்தால், சலசலத்து தண்ணீர் ஓடும் ஓடை கோவை குற்றாலம் வந்து விட்டதை காட்டும். வாகனங்கள் அதற்கு மேல் அனுமதி இல்லை. வனத்துறை வாகனங்களில் தான் செல்ல வேண்டும். வனத்துறை சோதனைச் சாவடியில் நுழைவுக்கட்டணம், கேமரா கட்டணம், வாகன கட்டணம் செலுத்தி விட்டு வந்து நின்றால், வனத்துறை வாகனம் வந்து நிற்கும். அதில் ஏறினால் காடுகளுக்குள் செல்லும் பாதையில் பேருந்து பயணம் தொடரும். சிறுவாணி அணைக்கு செல்லும் பாதையில் இருந்து இடதுபுறம் அருவிக்கு செல்லும் பாதை பிரியும். அங்கே இரு புறமும் உயர்ந்து வளர்ந்த தேக்கு மரக்காடுகள் சில்வண்டுகளின் ரீங்காரம் ஓலிக்க நம்மை வரவேற்கும்.
தேக்கு மரக்காடுகள் முடியும் இடத்தில் இருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காடுகளுக்குள் நடை பயணமாக செல்ல வேண்டும். பசுமை போர்த்திய வனம், முகத்தை வரும் குளிர் காற்று, பறவைகளின் கீச்சொலிகள், ஆங்காங்கே குவிந்து கிடக்கும் யானைச் சாணங்கள் என திரில் அனுபவமாக இருக்கும். வியர்க்க விறுவிறுக்க நடந்தால், கொட்டும் நீர் வீழ்ச்சி குளிக்க வரவேற்கும்.
மலைக்காடுகளில் இருந்து வானம் கொட்டுகிறது. மலைகளில் பல அடுக்குகள் தாண்டி நீர் அர்ப்பரித்து விழுகிறது. ஒவ்வொரு அடுக்குகளிலும் பலர் கூட்டம் கூட்டமாக குளித்துக் கொண்டிருப்பார்கள். நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து விழும் குளிர்ந்த தெளிந்த நீர் தேகம் நனைக்க, உடலும் மனமும் புத்துணர்வு அடையும். தண்ணீரில் குளித்து, ஆட்டம் போட்டால் நேரம் செல்வதே தெரியாது. விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிவது வழக்கம். உடை மாற்றும் அறைகள், நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிகமானால் எச்சரிக்கும் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடைமழை காலத்திலும், நீர் வறண்டு போகும் கோடை காலத்திலும் நீர் வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்படும். அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
வெகு நேரத்திற்கு பின்னர் பிரிய மனமின்றி மேலே வந்தேன். உடல் ஈரம் உலர்ந்தாலும், மனதின் ஈரம் உலர்வதில்லை. ரம்மியமான இயற்கை சூழலில் பிரிய மனம் இல்லாதவர்களுக்கு, ஒரு நாள் தங்கிச்செல்லும் வாய்ப்பு உள்ளது. குளியலுக்கு பின் இரவு நேர ஓய்வுக்காக கோவை குற்றால நுழைவாயிலுக்கு அருகில் சுற்றுலா பயணிகளுக்காக தங்குமிடங்கள் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் மர வீடுகள் மனதை கவரும் வகையில் இருந்தன. இங்கு தங்க வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வனச்சூழலில் குளியலோடு, இரவுப் பொழுதை இனிமையாக கழிக்க கோவை குற்றாலத்திற்கு செல்லலாம்.