இனி ட்விட்டர் ப்ளூ டிக்குக்கு பணம் செலுத்தவேண்டுமா? - மஸ்க் கொண்டு வரும் மாற்றம் என்ன?
மஸ்க் தனது ட்வீட்டில் என்ன மாறலாம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்காமல் "முழு சரிபார்ப்பு செயல்முறையும் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது" என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அதன் பயனர் சரிபார்ப்பு செயல்முறையை மறுபரிசீலனை செய்யும் என்று எலோன் மஸ்க் தனது ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சமூக ஊடக தளங்களில் ஒன்றைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மஸ்க் தனது ட்வீட்டில் என்ன மாறலாம் என்பது பற்றிய கூடுதல் விவரங்களைத் தெரிவிக்காமல் "முழு சரிபார்ப்பு செயல்முறையும் இப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது" என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் தனது கணக்கு வைத்திருப்பவரின் அடையாளத்தை சரிபார்க்க ப்ளூ டிக்குக்கான குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்க பரிசீலித்து வருகிறது, இதனை ட்விட்டரின் நியூஸ் லெட்டர் பகுதி அதிகாரபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கையின்படி, பயனர்கள் ப்ளூ டிக்குக்கு மாதத்திற்கு 4.99 டாலருக்குக்கு செலுத்த வேண்டும் இல்லையேல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில் அவர்களின் "வெரிஃபைட்" பேட்ஜ்களை இழக்க நேரிடும்.
இதுகுறித்து எலான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்தத் திட்டம் ஒருவேளை அகற்றப்படலாம் என்றாலும் இந்த சரிபார்ப்பு விதிமுறைகள் ட்விட்டர் ப்ளூவின் ஒருபகுதியாக மாறும் என தெரியவந்துள்ளது.
ட்விட்டர் ப்ளூ கடந்த ஆண்டு ஜூன் மாதம் தளத்தின் முதல் சந்தா சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது, இது ட்வீட்களைத் திருத்துவதற்கான அம்சம் உட்பட மாதாந்திர சந்தா அடிப்படையில் "பிரீமியம் அம்சங்களுக்கான பிரத்யேக அக்ஸஸினை" வழங்குகிறது.
ட்வீட்களைத் திருத்துவதற்கான அம்சம் இந்த மாத தொடக்கத்தில் கிடைக்கப்பெற்றது, ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் வாக்கெடுப்பைப் பயன்படுத்தி மஸ்க் வற்புறுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தனது மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களிடம் எடிட் பொத்தான் வேண்டுமா என்று அவர் கேட்டார். 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ஆம் என்று கூறியிருந்தனர்.
லாக் அவுட் செய்த பயனர்கள் ட்விட்டரின் தளத்தைப் பார்வையிட ட்ரெண்டிங் ட்வீட்களைக் காட்டும் எக்ஸ்ப்ளோர் பக்கத்திற்குத் திருப்பிவிடுமாறு மஸ்க் தனது ஊழியர்களிடம் அறிவுறித்தியதாக தகவல் அறிந்த சில ஊழியர்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை கடந்த வியாழக்கிழமை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். ட்விட்டர் சிஇஓ பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்குபேரை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.
ட்விட்டரில் பொறுப்பேற்றதில் இருந்து மஸ்க் அதிகம் பேசவில்லை, ஆனால் அவர் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகளை (content moderation decisions) மேற்பார்வையிட சில வகையான கொள்கை ஆலோசனைக் குழுவை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்த குழு "பல்வேறு கண்ணோட்டங்களை" பிரதிபலிக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவிக்கிறார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை ட்வீட் செய்த எலான் மஸ்க் “தெளிவாக இருக்க, ட்விட்டரின் உள்ளடக்க மதிப்பாய்வு கொள்கைகளில் நாங்கள் இன்னும் எந்த மாற்றமும் செய்யவில்லை" என்றார். முக்கியமாக, கவுன்சில் அமலுக்கு வருவதற்கு முன்பு, எந்த முக்கிய முடிவுகளையும் அல்லது கணக்கு மறுசீரமைப்புகளையும் செய்யமாட்டேன் என்கிறார் எலான். அதாவது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மீண்டும் ட்விட்டருக்கு அழைத்து வரும் எண்ணம் இல்லை என்கிறார்.