Whatsapp New Update: இரண்டு ஸ்மார்ட்போன் ஆனால் ஒரே வாட்ஸ் அப்.. விரைவில் அசத்தல் அப்டேட்!
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது.
உலகளவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் தகவல்பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். புதுசு புதுசாக பயனர்களை கவரும் அப்டேட்களை கொடுத்து தம் செயலியையும் நிகழ்கால அப்டேட்டிலேயே வைத்திருக்கிறது அந்நிறுவனம். கவர்ச்சியானதாக மட்டுமே இல்லாமல் தனிநபர் தகவல் பாதுகாப்புக்காகவும், சமூக அக்கறையுடனும் பல்வேறு அப்டேட்கள் கொண்டுவரப்படுகின்றன.
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு வேறுபட்ட பயனாளர்களுக்கும் பல அப்டேட்களை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துவண்ணமே உள்ளது. வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக இருந்த வாட்ஸ் அப்பில் , போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் என அடுத்தடுத்த அப்டேட்கள் வந்தன. இந்நிலையில் வாட்ஸ் அப்பை இரண்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் அப்டேட் விரைவில் வரவுள்ளது. தற்போது சோதனைமுறையில் இருக்கும் அந்த அப்டேட் விரைவில் பீட்டா வெர்ஷனில் வரும் என்றும், அதன் பின்னர் அனைவருக்கும் இந்த அப்டேட் வரும் என்றும் தெரிகிறது. இது அறிமுகமானால் ஒரே வாட்ஸ் அப் கணக்கை இரண்டு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் மல்டி டிவைஸ் பயன்படுத்தும் முறை உள்ளது. டேப்லட், கம்யூட்டர் போன்ற 4 இடங்களிலும், ஒரு ஸ்மார்ட் போனிலும் பயன்படுத்தலாம். ஆனால் வரப்போகும் அப்டேட்டானது இரண்டு ஸ்மார்ட் போன்களுக்கானது.
எப்போது அறிமுகமாகும்?
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனுக்கு இந்த அப்டேட் தற்போது தயாராகி வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனுக்கும், அதற்கு பின் அனைவருக்கும் இது அறிமுகமாகும் எனக் கூறப்பட்டுள்ளது
முன்னதாக, பணம் அனுப்பும் முறையில் வாட்ஸ் அப் சில அப்டேட்களை கொண்டு வந்தது. வாட்ஸ்அப்பில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அதனை அதன் ஒட்டுமொத்த பயனர்களின் ஒரு பகுதியினரால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இப்போது, இந்த பேமெண்ட் அம்சத்தில் ஒரு புதிய சேவையை நிறுவனம் இப்போது சோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த சேவையைச் சோதனை செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் அடுத்து வரவிற்கும் எதிர்கால அப்டேட்டில் கேஷ்பேக் அம்சத்துடன் வேலை செய்யும் என்பதை வெளிப்படுத்துகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் இனி பணப்பரிமாற்றத்திற்கு என்று தனியாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.