பயனர்களின் விவரங்களை கேட்டு பேஸ்புக்கிடம் 40300 கோரிக்கைகள் விடுத்த இந்தியா!
பயனர்களின் விவரங்களை கேட்டு 2020 பிற்பகுதியில் 40ஆயிரத்து 300 கோரிக்கைகள் இந்திய அரசிடமிருந்து வந்ததாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளத்தில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். இந்நிறுவனம் இன்ஸ்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறது. சோஷியல் மீடியா என்பது வெறும் பொழுது போக்கு அம்சமாக தொடங்கப்பட்டாலும் இன்று அரசியல், வியாபாரம் என அது ஒரு தனி மீடியமாகவே செயல்படுகிறது. தேர்தல் பிரசாரம், போராட்டக்களம் என அனைத்து தரப்பிலும் தன் பங்கை பதிவு செய்கிறது சோஷியல் மீடியா. அதனால் அதற்கான கட்டுப்பாடுகளும் அரசால் விதிக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரியில் சமூக வலைதளங்களுக்கு, ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துகளை முதலில் பதிவிட்டது யார் என்பதை அறியும் வசதி வேண்டும், அதனை 36 மணி நேரத்துக்குள் நீக்க செய்ய வேண்டும்,புகாரை விசாரிக்க ஒரு தலைமை அதிகாரி உள்பட 3 அதிகாரிகளை சோஷியல் மீடியா நிறுவனங்கள் நியமிக்க வேண்டும், அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும், நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் அறிக்கைகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய விதிமுறைகள் கொடுக்கப்பட்டன
இந்நிலையில் பயனர்களின் விவரங்களை கேட்டு 2020 பிற்பகுதியில் 40ஆயிரத்து 300 கோரிக்கைகள் இந்திய அரசிடமிருந்து வந்ததாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி-ஜூன் வரை இந்திய அரசிடம் இருந்து 35,560 கோரிக்கைகள் வந்த நிலையில் அதன்பின் கோரிக்கைகள் 13.3% அதிகரித்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று துஷ்பிரயோகம் தொடர்பாக 878 பதிவுகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் கூறியுள்ளது.
மொத்த கோரிக்கைகளில் 37865 கோரிக்கைகள் சட்ட நடவடிக்கை தொடர்பாகவும், 2435 கோரிக்களை உடனடி நடவடிக்கை எடுக்கக்கூறிய கோரிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளது பேஸ்புக். அரசு கோரிக்கை விடுத்தாலும் தங்களின் விதிமுறைகள் படி அரசின் ஒவ்வொரு கோரிக்கையையும் ஆராய்கிறோம். விதிமுறை, நிபந்தனைகளை மீறிய கணக்குகள் என்றால்மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க உதவுகிறோம் என பேஸ்புக் தெளிவுபடுத்தியுள்ளது
பயனர்களின் விவரங்களை கேட்டதில் அமெரிக்காவே முதலிடம் பிடித்துள்ளது. மொத்தமாக 61262 பேரின் விவரங்களை அமெரிக்கா கேட்டுள்ளது. சர்வதேச அளவில் கணக்கிட்டால் 2020ன் தொடக்கத்தில் பேஸ்புக்கிற்கு 173592 கோரிக்கைகள் வந்துள்ளன. 2020ன் பிற்பகுதியில் 191013 கோரிக்கைகள் வந்துள்ளது. இது 10% அதிகம். அந்தந்த நாட்டின் அரசியலமைப்பு, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பேஸ்புக் நடவடிக்கை எடுத்து வருவதா அந்நிறுவனம் விளக்கியுள்ளது. 2021ஐ பொருத்தவரை சர்வதேச அளவில் நிர்வானம், பாலியல் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது.
முன்னதாக, சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்த அரசு, புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படி, இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக ஊடக தளங்கள் சாதாரண பயனர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன, ஆனால் அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என விதிமுறைகளை விளக்கியது. இந்த விதிமுறைகளால் கருத்து சுதந்திரம் நசுக்கப்படலாம் என்றும் விமர்சனங்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.