இளைஞர்களின் பாதுகாப்பு.. விரைவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய மாற்றங்கள்..! விவரம்!
இன்ஸ்டாகிராம் தளத்தில் இளைஞர்களுக்கு பாதுகாப்பாக அமைக்க புதிய வசதி விரைவில் வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் அதிக பேர் மூழ்கி இருக்கும் முக்கியமான சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கில் டிக்டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டா ரீல்ஸ் பலரையும் அடிமையாக்கி உள்ளது. அந்த வகையில் பள்ளி மற்றும் இளம் பருவத்தில் இருக்கும் பலர் இந்த தளத்தில் அதிகமாக தங்களுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் நிக் கிளக் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,”எங்களுடைய தளத்தை இளம் வயதினர் குறிப்பாக விடலை பருவத்தில் உள்ளவர்கள் சில பதிவுகளை அதிமாக பார்த்து வருகின்றனர். அது அவர்களுடைய மனதில் தவறான எண்ணத்தை விளைவிக்க கூடும்.
ஆகவே இதை நாங்கள் தடுக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளோம். அதேபோல் பள்ளி பருவத்தில் இருக்கும் நபர்கள் எங்களுடைய தளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கும் வகையில் டேக் அ பிரேக் என்ற வசதியையும் அறிமுகம் செய்ய உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் டீன் ஏஜ் இளைஞர்களுக்கு மிகவும் ஆபத்தாக அமைந்துள்ளதாக ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த தளங்களை இளைஞர்களுக்கு பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய வசதி தொடர்பாக சில செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த வழக்கிற்கு பிறகு இன்ஸ்டாகிராம் கிட்ஸ் என்ற புதிய தளம் தொடங்கும் திட்டத்தை இன்ஸ்டாகிராம் தளம் நிறுத்தி வைத்துள்ளது. அந்த வசதியை செயல்படுத்த ஏற்கெனவே குழந்தை நல செயல்பாட்டாளர்களிடம் இருந்து அதிகளவில் எதிர்ப்பு எழுந்ததால் அந்த வசதியை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் ஆன்லைன் பள்ளி கல்லூரி வகுப்புகள் ஆகியவை காரணமாக இந்தியாவிலும் பல குழந்தைகள் மற்றும் விடலை பருவத்தினர் எப்போதும் மொபைல் போன்களில் மூழ்கியுள்ளனர்.
இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் அவர்கள் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் வந்தால் அது நல்ல பயனாக அமையும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வசதி கூடிய விரைவில் இந்தியாவிலும் வந்தால் நல்லது என்று பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Amazon Great Indian Festival Sale: என்ன வாங்கலாம்? தள்ளுபடி விற்பனையில் டாப் 5 ஸ்மார்ட்போன்ஸ்!