இனி எங்க ஆட்டம்! ரஷ்யாவை குறி வைக்கும் ஹேக்கர்ஸ்! சைபர் போர் அறிவிப்பால் விழிபிதுங்கும் ரஷ்யா!!
சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையதளங்கள் வேகம் குறைந்தும், செயல்படாமலும் போயிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக ஹேக்கர்கள் சைபர் போரை தொடங்கியுள்ளனர். ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக தகவல்களை தாங்கள் கசியவிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் பதற்றம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனின் முக்கியமான இடங்களை நோக்கி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் போர் விமானங்கள் உக்ரைனுக்குள் தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலை ‘மூன்றாம் உலகப் போர்’ என்றே அனைவரும் கூறுகிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.
சீனா, சிரியா போன்ற சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி 48 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் உக்ரைன் தரப்பில் நிகழ்ந்திருக்கிறது. பல சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. வான், கடல், தரை என அனைத்து விதத்திலும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள். பலர் பதுங்கு குழிகளில் பத்திரமாக தங்கியுள்ளார்கள். இந்நிலையில் கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், மேற்கு எல்லையை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்.
#Anonymous is currently involved in operations against the Russian Federation. Our operations are targeting the Russian government. There is an inevitability that the private sector will most likely be affected too. While this account cannot claim to speak for the whole (con)
— Anonymous (@YourAnonNews) February 24, 2022
வான்வழி, கடல்வழி, தரைவழியாக நடத்தப்படும் தாக்குதலால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தங்களை பாதுகாத்துக்கொள்ள உக்ரைன் தரப்பிலும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த படையெடுப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், உக்ரேனுக்கு ஆதரவாக உலக நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர் குழு ஒன்று கைகோர்த்துள்ளது. இந்த குழு ரஷ்யா மீது சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. தங்களின் சைபர் போர் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என இக்குழு வெளியிட்ட அறிக்கையின் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்துள்ளது. இதன் ஒருபகுதியாக Anonymous என்னும் ஹேக்கர்ஸ் குழு ரஷ்யாவுக்கு எதிராக சைபர் போரை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியான RT news, அரசு வலைதளங்களை இந்த ஹேக்கர்ஸ் குழு இணைய தாக்குதலை DDoS attack. நடத்தியுள்ளது. ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளமும் இந்த சைபர் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக வலைதளத்தில் இருந்த தகவல்களை தாங்கள் கசியவிட்டுள்ளதாகவும் இந்த ஹேக்கர்ஸ் குழு தெரிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது எந்த அறிவிப்பும் இன்றி போர் தொடுத்து அப்பாவி மக்களை கொல்கிறது. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று சமூக நலன் சார்ந்து செயல்படும் ஹேக்கர் அமைப்பு அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையதளங்களில் சில வேகம் குறைந்தன என்றும், மற்றவை செயல்படவில்லை என்று தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர வேண்டாம் என்றால், ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக நலன்களை சார்ந்து செயல்படும் இந்த ஹேக்கர் அமைப்பில், உலகளவில் உள்ள பிரபல ஹேக்கர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் hacktivists என்று குறிப்பிடப்படுகின்றனர்.
2003 ஆம் ஆண்டு உதயமான இந்த குழு, டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. இந்த குழு முன்பு அமெரிக்கா, இஸ்ரேல், உகாண்டா, துருக்கி மற்றும் பிற நாடுகளின் அரசு நிறுவனங்களை தாக்கியுள்ளது. இது பேபால், Mastercard, Visa, சோனி உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களையும் குறிவைத்து சைபர் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த குழு இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இவர்களை நெருங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அடையாளங்களை வெளிப்படுத்தாமல் செய்ய வேண்டிய வேலைகளை, சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.
Hackers all around the world: target Russia in the name of #Anonymous
— Anonymous (@YourAnonNews) February 25, 2022
let them know we do not forgive, we do not forget.
Anonymous owns fascists, always.
உக்ரைன் கணினிகள் மீது தீங்கிழைக்கும் மென்பொருளை ரஷ்யா நேற்று நிறுவியது. இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE வெளியிட்ட தகவல்களின் படி, "இந்த மென்பொருள் உக்ரைனில் பல கணினிகளைத் தாக்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளது," என அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தது. இது மிகவும் ஆபத்தில் கொண்டு போய் விடும் என்று நினைத்த இந்த ஹேக்கர் குழு, ரஷ்யா கணினிகள் மீது சைபர் தாக்குதலைத் தொடங்கி உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தலில், 130க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போரை நிறுத்துவதற்காக பல வேலைகளை பலரும் உலகம் முழுவதும் செய்து வரும் நிலையில், இந்த சைபர் போர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.