ஐபிஎல் முதல் வார டாப்-5 சிறப்பான தரமான சம்பவங்கள்
2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நடப்பு தொடரில் தொடக்கம் முதலே அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடப்பு தொடரின் முதல் வாரத்தில் நடைபெற்ற சிறப்பான தரமான சம்பவங்களை சற்று திரும்பி பார்ப்போம்.
5.மும்பையை அதிரவைத்த ஹர்ஷல் பட்டேலின் 5 விக்கெட்:
நடப்பு தொடரின் முதல் போட்டியில் சாம்பியன் அணியான மும்பை- பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தனது அசத்தலான பந்துவீச்சால் பெங்களூரு அணியின் ஹர்ஷல் பட்டேல் மும்பை பேட்ஸ்மென்களை திணறடித்தார். இவர் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இவரின் பந்துவீச்சில் வலுவான மும்பை அணியை பெங்களூரு எளிதில் வீழ்த்தியது.
4. வீணான சஞ்சு சாம்சனின் சதம்:
இந்த தொடரின் 4ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடக்கம் முதல் ரசிகர்களுக்கு பெரிய ரன் விருந்தாக அமைந்தது. கே.எல்.ராகுல்(91) மற்றும் தீபக் ஹூடா(64) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 221 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் தனி ஆளாக அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய சாம்சன் நடப்பு தொடரின் முதல் சதத்தை அடித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் யாரும் சரியாக கை கொடுக்காததால் ராஜஸ்தான் அணி 217 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
3. பந்துவீச்சில் கலக்கும் பொல்ட், பும்ரா,சாஹர் கூட்டணி:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை மைதானத்தில் இரண்டு முறை 150 ரன்கள் அடித்து அதை வெற்றிகரமாக டிஃபெண்ட் செய்த அணி மும்பை இந்தியன்ஸ். இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் மூன்று முக்கியமான பந்துவீச்சாளர்கள். பொல்ட்,பும்ரா, ராகுல் சாஹர் ஆகிய மூவரும் ரன்கள் குறைவாக கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் இந்தக் கூட்டணி மொத்தமாக 6 விக்கெட் வீழ்த்தியது. அதேபோல் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இக்கூட்டணி 7 விக்கெட் வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியது. இந்த மூவர் கூட்டணி பந்துவீச்சில் கலக்கி வருவதால் மற்ற அணிகளுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
2. பஞ்சாப் கிங்ஸ் அணியை பந்தாடிய தீபக் சாஹரின் 4 விக்கெட்:
8ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. கடந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்தால் இந்த முறையும் பஞ்சாப் அணி வலுவான ஸ்கோரை அடித்து சென்னைக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பஞ்சாப் அணியின் அந்த கனவை தீபக் சாஹர் முதல் 6 ஓவர்களுக்குள் துவம்சம் செய்தார்.
சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்தி பஞ்சாப் அணியை பின்னுக்கு தள்ளினார். இவரின் அசத்தலான பந்துவீச்சால் பஞ்சாப் அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
1.வயதானாலும் அதிரடி காட்டும் ஏபிடி:
இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்கிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று பெங்களூரு அணி அசத்தியுள்ளது. முதல் ஐபிஎல் கோப்பையை எதிர்நோக்கி இருக்கும் பெங்களூரு அணிக்கு இது ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. பெங்களூரு அணியில் மிகவும் முக்கியமான வீரர்கள் என்றால் அது கோலி, டிவில்லியர்ஸ்,மேக்ஸ்வெல் தான்.
இந்தத் தொடரில் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியரஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்ற டிவில்லியர்ஸ் நடப்பு தொடரில் அதிரடியில் அசத்தி வருகிறார். நடப்பு தொடரில் 48,1,76* என்ற ரன்களை அடித்து அசத்தி வருகிறார். ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.