Praggnanandhaa meets Rajini : 'ரஜினி அங்கிளை சந்தித்தோம்.. அவரின் அடக்கம்'.. பிரமித்துபோன பிரக்ஞானந்தா!
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பிரக்ஞானந்தா என்ற பெயர் உலகையே ஆச்சரியப்படுத்தி வருகிறது. வெறும் 16 வயதில் பல்வேறு சாதனைகளை படிப்படியாக அடுக்கி அகில உலகத்தையும் அசர வைக்கிறார் இந்த பிரக்ஞானந்தா. செஸ் உலகில் கிராண்ட் மாஸ்டர், உலகின் நம்பர் 1 ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த பெருமை என இவரின் சாதனைகள் தமிழ்நாட்டை கடந்து இந்தியாவிற்கே பெரிய அங்கீரமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது குடும்பத்தை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை பிரக்ஞானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ” இது என்னால் மறக்க முடியாத நாள். இன்று என் குடும்பத்துடன் நடிகர் ரஜினி காந்த் மாமாவை சந்தித்தோம். பெரிய உயரங்களை எட்டிய போதிலும் அவரது அடக்கத்தால் ஈர்க்கப்பட்டவன் நான்” என்று பதிவிட்டுள்ளார்.
A day to remember!!! Met @rajinikanth uncle today with my family! Inspired by his humbleness despite reaching great heights! #Respect #Magizchi pic.twitter.com/Xfg2XUg5RD
— Praggnanandhaa (@rpragchess) July 23, 2022
யார் இந்த பிரக்ஞானந்தா ?
சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய தந்தை ரமேஷ்பாபு மற்றும் தாய் நாகலட்சுமி எப்படி இவர்களின் கவனத்தை மாற்றுவது என்று நினைத்துள்ளனர். அந்த சமயத்தில் தீவிர செஸ் ரசிகரான ரமேஷ் பாபு தன்னுடைய மகள் வைஷாலியை முதலில் செஸ் பயிற்சிக்கு சேர்த்துள்ளார்.
அக்கா வைஷாலி செஸ் பயிற்சி வகுப்பிற்கு செல்வதை பார்த்த பிரக்ஞானந்தாவிற்கு சிறுவயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்காவிடம் இருந்து நான்கு வயது முதல் செஸ் கற்று கொள்ள தொடங்கினார். 5 வயது முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். தன்னுடைய 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார்.
இதைத் திடர்ந்து 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார். இதன்பின்னர் 2019 ஆண்டு நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அத்துடன் 2019 டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்திருந்தார்.
ஒருகட்டத்தில் இவர் மற்றும் இவருடைய அக்கா வைஷாலியின் செஸ் பயிற்சிக்கு பெற்றோர்களால் பணம் செலுத்த முடியாத சூழல் உருவாகியது. அப்போது ஒரு தொழிலதிபர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தார். அதேபோல் பிரக்ஞானந்தாவின் பள்ளி அவருக்கான பள்ளி கட்டணம் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றை தளர்த்தியது. இதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரக்ஞானந்தா தொடர்ந்து செஸ் விளையாட்டில் கவனம் செலத்தி வருகிறார். இவர் எப்போதும் அதிகம் பேசுவதில்லை. அவருக்கு பதிலாக அவருடைய ஆட்டம் தான் அதிகம் பேசும். திநகரிலுள்ள பிரபல செஸ் பயிற்சியாளார் ஆர்.பி.ரமேஷின் மாணவர்களில் இவரும் ஒருவர். தற்போது தன்னுடைய 16 வயதில் உலக சாம்பியன் மெக்ன்ஸ் கார்ல்சனை வீழ்த்தி அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்