ஐபிஎல் தொடரின் 4ஆவது லீக் போட்டி - ராஜஸ்தான் - பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்
ஐபிஎல் லீக் தொடரின் நான்காவது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இதுவரை மூன்று லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 நான்காவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் தலைமையில் விளையாடிய ராஜஸ்தான் அணி, இந்தாண்டு சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் நட்சத்திர பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடமாட்டார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது. எனினும், லிவிங்ஸ்டன், உனட்கட், கார்த்திக் தியாகி ஆகியோர் வேகப்பந்து வீச்சில் பஞ்சாப் வீரர்களை மிரட்ட வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் ஆகியோர் பொறுப்புடன் ஆடினால் நல்ல ஸ்கோர்களை எட்ட முடியும். ரியான் பராக், மிடில் ஆர்டரில் சிவம் துபே, ராகுல் திவேட்டியா, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் மிடில் ஆர்டரில் பங்களிப்பு செய்தால் தொடரை ராஜஸ்தான் வெற்றியுடன் தொடங்கலாம்.
இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியாக இருந்த அணி, இந்த தொடரில் இருந்து இனிமே பஞ்சாப் கிங்ஸ் அணியாக களமிறங்குகிறது. பேட்டிங்கிற்கு ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், பூரான் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் ரிச்சர்ட்சன், ஷமி, ரவி பிஷ்னாய் நன்றாக பந்துவீசினால் ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை தொடக்கத்திலேயே நிறுத்திவிடலாம்.
இரு அணிகள் இதுவரை 21 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் 12இல், பஞ்சாப் 9இல் வெற்றி பெற்றுள்ளன.