Imane Khelif: பாரிஸ் ஒலிம்பிக்! பாலின சோதனையில் தோற்ற அல்ஜீரிய வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்
பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்த அல்ஜீரியாவின் குத்துச்சண்டை வீராங்கனை இமானே கேலிஃப் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாரிஸ் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் மறக்க முடியாத அளவிற்கு ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறியது. அதில், குத்துச்சண்டை வீராங்கனையான அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த இமானே கேலிஃப் பங்கேற்றதும் ஆகும்.
இமானே கேலிஃப் தோல்வி:
பாலின பரிசோதனையில் தோல்வியடைந்த அவர் போட்டியில் பங்கேற்றதை பலரும் விமர்சித்தனர். இருப்பினும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்த அவர் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யங் லியூ-வை எதிர்கொண்டார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் அல்ஜீரிய வீராங்கனை இமானே கேலிஃப் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
பதக்கம் வென்றது தொடர்பாக பேசிய இமானே கேலிஃப், நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். கடவுள்தான் இதை நிகழ்த்தினார். இது எனது கனவு என்று கூறினார். இமானே கேலிஃப் தங்கப்பதக்கம் வென்றதற்க ரசிகர்கள் ஒருபுறம் வாழ்த்து கூறினாலும், மறுபுறம் பலரும் விமர்சிக்கவும் செய்து வருகின்றனர்.
கடவுளுக்கும், மக்களுக்கும் நன்றி:
அல்ஜீரிய வீராங்கனை இமானேவிற்கு அவரது நாட்டு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்தனர். இவர் போட்டியில் களமிறங்கியது முதலே அவரை மைதானத்தை சுற்றி இருந்த அவரது நாட்டு ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர்.
பதக்கம் வென்ற பிறகு அல்ஜீரிய வீராங்கனை இமானே மேலும் கூறியதாவது, எனது ஆட்டம் காரணமாக நான் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த வெற்றிக்கான மோதல் அற்புதமாக இருந்தது. நான் இதற்காக அமெரிக்கா, ஐரோப்பா உலகம் முழுவதும் 8 ஆண்டுகள் தயார் ஆனேன். நான் மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
அல்ஜீரிய மக்கள் இங்கு வந்து எனக்கு ஆதரவு தந்தனர். எனது பயிற்சியாளர், அல்ஜீரிய அணியும் எனக்கு ஆதரவு அளித்தனர். அல்ஜீரிய வாழ்க, அல்ஜீரிய அதிக பதக்கத்திற்கு தகுதியானது. கடவுளுக்கு நன்றி. நான் இதை மொத்த அரபு உலகத்திற்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.
குவியும் வாழ்த்தும், விமர்சனமும்:
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கனவில் இருந்து நிஜத்திற்கு, இந்த பயணமே தங்கம். நாட்டின் முதன்மையாக இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த யுத்தம் ஒருபோதும் முடியாது. மேலும் வலுப்படுத்தும் என்று பதிவிட்டுள்ளார். இமானே கேலிஃப் வெற்றி பெற்றதும் அவரது பயிற்சியாளர் அவரை தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தைச் சுற்றி உலா வந்தார். மேலும், அல்ஜீரிய நாட்டு அதிபரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேசமயம், பலரும் அவரது பாலினத்தை கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.
தற்போது தங்கம் வென்றுள்ள இமானே கேலிஃப் கடந்தாண்டு டெல்லியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது பாலின பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். நடப்பு ஒலிம்பிக்கில் அவர் 46 நொடிகளில் இத்தாலி வீராங்கனையை வீழ்த்தியபோதும் பெரும் சர்ச்சை வெடித்தது.