(Source: Poll of Polls)
கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி: தாரை தப்பட்டை உடன் வரவேற்ற கிராம மக்கள்!
என்னை ஊக்குவித்த எனது பெற்றோருக்கும், எனது பயிற்சியாளர், ஆசிரியர் அவர்களுக்கும் எனது பள்ளி ,கல்லூரி ஆசிரியர்களுக்கும் எனது சக தோழிகளுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் கபடி போட்டியில் 10 பேர் கொண்ட தமிழக வீராங்கனைகள் குழு கலந்துகொண்டு முதல் பரிசை வென்றனர். 10 பேர் கொண்ட மகளிர் கபடி குழுவில் கரூர் மாவட்டம், ஜெகதாபி அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற கல்லூரி மாணவியும் கலந்துகொண்டார்.
ஆனந்தி நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் கபடிப் போட்டியில் 10 பேர் கொண்ட குழுவில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்ற ஆனந்தி இன்று தனது சொந்த கிராமத்திற்கு வந்தார். அப்போது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் வந்த கபடி வீராங்கனை ஆனந்திக்கு உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி போட்டியில் மகளிர் அணியின் சார்பாக கலந்துகொண்டு முதல் பரிசை வென்றுள்ள கல்லூரி மாணவிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவி ஆனந்தி பேசுகையில் - எனது விடாமுயற்சி தற்போது வெற்றி கண்டுள்ளது எனது வெற்றிக்காக பாடுபட்ட எனது தாய், தந்தையருக்கும் எனது பயிற்சியாளர் எனது சக தோழிகளுக்கு எனது பள்ளி கல்லூரி ஆசிரியர் பெருமக்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். எனது வெற்றிகள் தொடர இன்னும் பல்வேறு முயற்சிகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் கூறினார்.
ஆண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் இரவு, பகலாக விளையாடக்கூடிய கபடி போட்டியில் பெண்கள் அணியும் கலந்துகொண்டு அதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பரிசை வென்றிருப்பது பெண்களுக்கு முன்னுதாரணமாகும்.
விளையாட்டு என்பது உடல் வலிமையை ஊக்குவிக்கவும், விளையாட்டு என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்றாக அன்று முதல் இன்று வரை கருதப்படுகிறது. ஆகவே, விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டினால் பின் வரும் காலங்களிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கிடைக்க என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் தேசிய விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.