’போங்க... சஞ்சு... இப்பிடி பண்ணிட்டீங்களே...’ இந்திய ஆட்டத்தால் ‛அப்செட்’ ஆன பாக் வீரர் கம்ரான் அக்மல்!
சஞ்சு சாம்சனுக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க இலங்கைத் தொடரை விட சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்காது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயணம் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இந்த தொடரில் ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியினர், டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியையும் அபாரமாக வெற்றி பெற்றனர். ஆனால், அடுத்த இரு போட்டிகளில் குருணல் பாண்ட்யாவிற்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய அணியின் பிரதான வீரர்களாக சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்ட்யா, இஷான் கிஷான், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டது.
இதனால், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ்ராணா, சேத்தன் சவுக்காரியா ஆகிய அறிமுக வீரர்களுக்கு இந்திய அணியில் இடம்கிடைத்தது. ஆனால், இந்திய வீரர்கள் தங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மோசமாக ஆடியதால் இந்திய அணி கடைசி இரு போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது. குறிப்பாக, கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 81 ரன்களுக்கு சுருண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் இந்திய வீரர்கள் ஆடிய விதம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் தனது யூ டியூப் தொலைக்காட்சியில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்ட இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது. சஞ்சு சாம்சன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை நெருக்கடியான சூழலில் இருந்து வெளிக்கொண்டு வருவார் என்று அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஐ.பி.எல். போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த அனுபவம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. ஆனால், சர்வதேச போட்டிகளில் ஆடும்போது ஐ.பி.எல். ஆட்டங்களில் காட்டிய உன்னிப்பான ஆட்டத்தையும், ஷாட்களையும் அவரிடம் காண முடியவில்லை. சஞ்சு சாம்சனுக்கு அவரை நிரூபிக்க இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது.
ஹசரங்கா இலங்கை கிரிக்கெட் அணிக்கு வருகை தந்தது முதல், அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இலங்கையில் நடைபெற்ற போட்டிகளில்கூட அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் அவர் விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். முத்தையா முரளிதரனுக்கு பிறகு மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளராக ஹசரங்கா விக்கெட்டுகளை கைப்பற்றுவது இலங்கை கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமான விஷயமாகும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் முக்கிய வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஆனால், அவர் மொத்தமே 34 ரன்களை மட்டுமே எடுத்தார். கடைசியாக அவர் இந்திய அணிக்காக ஆடிய 10 டி20 போட்டிகளில் முறையே 19,6,8,2,23,15,10,27,7,0 ஆகிய ரன்களையே ஒவ்வொரு போட்டியிலும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதம் டி20 உலககோப்பை போட்டித்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது அணி நிர்வாகத்திற்கும், ரசிர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.