KKR vs RR Match Highlights: பட்லர் சதம்; கொல்கத்தாவை துவம்சம் செய்த ராஜஸ்தான்; கடைசி பந்தில் த்ரில் வெற்றி!
KKR vs RR Match Highlights: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்ததி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சுனில் நரைனின் அதிரடி சதத்தினால் 223 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பில் அஸ்வின் மற்றும் சஹால் இருவரும் சேர்த்து மொத்தமாக 103 ரன்கள் வாரிக் கொடுத்தனர்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
அதன் பின்னர் 224 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பவர்ப்ளேவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் தங்கள்து விக்கெட்டுகளை அணியின் ஸ்கோர் 50 ரன்களை எட்டுவதற்கு முன்னரே வெளியேறினர். இதனால் ராஜஸ்தான் அணி நெருக்கடிக்கு ஆளானது என நினைக்கும்போது, ரியான் பிராக் களமிறங்கி அதிரடி ஆட்டத்தினை தொடக்க வீரர் பட்லருடன் வெளிப்படுத்தினார்.
இவர்கள் கூட்டணி 21 பந்தில் 50 ரன்களை எட்டியது. ஆனால் ரியான் பராக் தனது விக்கெட்டினை 34 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். ஹர்சித் ராணா வீசிய 8வது ஓவரின் 5வது பந்தினை ரியான் பராக் வேகமாக தூக்கி அடிக்க, பந்து ஆகாயத்தை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்தது. ஆனால் அந்த பந்து ஆடுகளத்தை விட்டு வெளியே போகாமல், ரஸலிடம் கேட்சாக தஞ்சம் அடைந்ததால், ப்ராக் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ஏற்கனவே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டு இருந்த ராஜஸ்தான் அணி தனது 4வது விக்கெட்டாக துருவ் ஜுரேலை இழந்தது. அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜுரேல் சுனில் நரைன் பந்தில் வெளியேறினார்.
ஷாக் கொடுத்த வருண் சக்ரவர்த்தி
அதன் பின்னர் வந்த அஸ்வின் பட்லருக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் கவனமாக விளையாடினார். ஆனால் இவர்கள் கூட்டணி 21 பந்தில் 21 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் தனது விக்கெட்டினை வருண் சக்ரவர்த்தி பந்தில் இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் வந்த வேகத்தில் சந்தித்த முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஆனால் அடுத்து வந்த ரோமன் பவல், பட்லருடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். 15வது ஓவருக்குப் பின்னர் இருவரும் கியரை அதிரடிக்கு மாற்றினர். இதனால் பவுண்டரி சிக்ஸர் வந்தவண்ணம் இருந்தது. இவர்கள் கூட்டணி 27 பந்தில் 57 ரன்கள் சேர்த்த நிலையில் பவல் தனது விக்கெட்டினை இழந்தார்.
வென்று கொடுத்த பட்லர்
இறுதியில் கடைசி இரண்டு ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளிப்பவராக பட்லர் மட்டுமே இருந்தார். 19வது ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 16 ரன்கள் விளாசினார் பட்லர். 19வது ஓவரில் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தினால், 17 ரன்கள் சேர்த்தார். இந்த 17 ரன்கள் மூலம் தனது சதத்தினையும் எட்டினார் பட்லர். இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய பட்லர், அடுத்த மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்கததால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது, ஆனால் 5வது பந்தில் இரண்டு ரன்களும் கடைசி பந்தில் ஒரு ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெறவைத்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

