IPL 2021 New Schedule: மும்பைக்கு மாற்றப்படும் ஐபிஎல் போட்டிகள்; அட்டவணையில் வருகிறது மாற்றம்
ஐபிஎல் தொடரை வரும் 7ஆம் தேதி முதல் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற இருந்த கொல்கத்தா-பெங்களூரு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் சென்னை, டெல்லி உள்ளிட்ட அணிகளிலும் வீரர்கள் அல்லாத சிலருக்கு கொரோனா தொற்று என்று செய்திகள் வெளியானது. இதனால் நேற்று முதல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரை வரும் 7ஆம் தேதி முதல் மும்பையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஏனென்றால் நேற்று டெல்லி கோட்லா மைதானத்தின் ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டெல்லியில் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத்தில் நேற்று கொல்கத்தா அணியில் இருக்கும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு இருந்தும் வீரர்களை மாற்ற பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரம் முதல் ஐபிஎல் போட்டிகள் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. இதையும் மாற்றி அனைத்து போட்டிகளையும் மும்பையில் நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மும்பையில் அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாக தங்க வைக்க ஓட்டல் ஏற்பாடுகள் மற்றும் அங்கு உள்ள மூன்று மைதானங்களில் போட்டியை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஐபிஎல் போட்டிகள் அட்டவணையிலும் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டி ஜூன் முதல் வாரத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கருதப்படுகிறது. தற்போது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை மாற்ற பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. மேலும் ஐபிஎல் தொடர் சற்று தள்ளிபோகும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் பிசிசிஐ இது தொடர்பாக ஐசிசியிடம் ஆலோசனை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐபிஎல் நடத்து சரியா? எனப் பலரும் கேள்வி எழுப்பிய சூழலில் தற்போது வீரர்கள் மற்றும் மைதான ஊழியர்களுக்கு பயோ பபுள் முறையிலும் தொற்று உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மீண்டும் இந்த கேள்வி எழும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே நேற்று முதல் ட்விட்டர் தளத்தில் '#cancelipl' என்ற ஹேஸ்டேக் வைரலானது. இதில் பல ரசிகர்கள் ஐபிஎல் தொடரை தற்போது நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டு வந்தனர். இந்தச் சூழலில் ஐபிஎல் தொடருக்கு புதிய அட்டவணை வெளியிடப்படலாம் என்பதை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்க உள்ளனர் என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.