IPL 2021: பலம்கொண்ட மும்பை அணியை வீழ்த்துமா கொல்கத்தா அணி?
ஐபிஎல் 2021 தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நடப்பு தொடரின் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்ந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை 27 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 21 ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ல் தோல்வியை தழுவியுள்ளது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பையின் கையே ஓங்கியுள்ளது. இதனை, இந்தத் தொடரில் கொல்கத்தா முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் ரோகித் சர்மா, சூர்யா குமார் யாதவ், கிறிஸ் லின், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா பேட்டிங்கில் ஜொலித்தால், கொல்கத்தாவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அவர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு உள்ளது. கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா, ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அதனை செய்வார்கள் என நம்பப்படுகிறது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில், ரானா, ராகுல் திரிபாதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களை பும்ரா, போல்ட் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தினால், மும்பை அணிக்கு நல்லது. ரசுல் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடாத காரணத்தால், அதனை இன்றைய போட்டியில் வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, அவரை கவனத்துடன் மும்பை பவுலர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
முதல் போட்டியில் மும்பை தோல்வி அடைந்தாலும், அந்த அணி எந்தவித அழுத்தம் இல்லாமல் கொல்கத்தாவை எதிர்கொள்ளும். காரணம், முந்தைய போட்டிகளில் கொல்கத்தாவுக்கு எதிராக அவர்கள் பெற்ற வெற்றிகளே அதற்கு சாட்சி. பழையதை மறந்து, முதல் போட்டியில் வெற்றி பெற்ற தெம்புடன், கொல்கத்தா அணி மும்பையை எதிர்கொள்ளும். இதனால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சென்னையில் உள்ள அனலை விட, ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.