CSK Team: தோனிக்கு எழுந்துள்ள புதிய தலைவலி - சென்னை அணிக்கு பின்னடைவா?
இங்கிலாந்து, நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் 2021 மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும், செப்டம்பர் - அக்டோபர் மாத காலகட்டத்தில் இதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டிருக்கும் நிலையில், மிகப்பெரிய குண்டை வீசியுள்ளது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐபிஎல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள செப்டம்பர் - அக்டோபர் மாத காலங்களில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதனால் சர்வதேச கிரிக்கெட்டிற்கே முன்னுரிமை, ஐபிஎல் தொடரில் வீரர்களை பங்கேற்க அனுப்பமுடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ஆடவர் அணியின் இயக்குனரான முன்னாள் வீரர் ஆஷ்லே கைல்ஸ் "இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இரண்டே நாட்களில் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட புறப்பட்டுவிடுவார்கள். ஒரு வேலை சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். டி 20 உலககோப்பைக்கு வீரர்களை தயாராக வைத்திருக்கவேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.
என்னது இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-லில் கிடையாதா, அப்போ சென்னை சூப்பர் கிங்ஸின் நிலை ?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு தற்போது வரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 5 வெற்றியுடன், புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி இந்தாண்டு செலுத்திய ஆதிக்கத்திற்கு இரண்டு இங்கிலாந்து வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமான காரணம். சென்னை அணியின் ஆல் ரவுண்டர்களான மொயின் அலி, சாம் கரண் இருவரும் அணியின் பிளேயிங் 11-இல் மிக முக்கியமான வீரர்கள். புதிதாக அணியுடன் இந்த சீசன் இணைந்த மொயின் அலி 6 போட்டிகளில் விளையாடி 206 ரன்கள் விளாசி, 5 விக்கெட்கள் கைப்பற்றினார். அதே நேரம் சாம் கரண் அவ்வப்போது அதிரடிகளை காட்டி, பந்துவீச்சில் 9 விக்கெட்களை வீழ்த்தினார். இப்படி இருக்க சென்னை அணி மீதமுள்ள 7 போட்டிகளில் 3 போட்டிகள் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற சூழலில், இந்த இரு வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த இரண்டு வீரர்களுக்கு மாற்று வீரரை தேர்வு செய்து அணியில் களமிறக்குவதே தோனிக்கு மிக பெரிய சிக்கலாக இருக்கும், இதை எப்படி சமாளிக்க போகிறது சென்னை அணி என்பது தான் தற்போது மிக பெரிய கேள்வி. இந்த நிலையில் சென்னை மட்டுமின்றி, ராஜஸ்தான் போன்ற அணிகளில் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற வீரர்கள் இல்லாவிடில், அது அணியை பெருமளவில் பாதிக்கும்.
மேலும் அறிய : "அந்த விவகாரத்திலிருந்து நகர்ந்து விடலாமே" - மித்தாலி ராஜ் vs ரமேஷ் பவார் சர்ச்சை!
நியூசிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் போது, அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் அணியுடன் தொடரில் விளையாட இருக்கிறார்கள், அதனால் அவர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் என தெரிகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்புவது குறித்து தற்போது வரை முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இன்றி ஐபிஎல் தொடர் நடைபெற்றால் வழக்கமான சுவாரசியம் மீதமுள்ள ஐபிஎல் தொடரில் இருக்குமா என்பது கேள்விக்குறியே!