”டெண்டுல்கரை அவமானப்படுத்திறீங்களா?” சர்ச்சையான ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை.. கவாஸ்கரின் அதிருப்தி
”இதை டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி என்று அழைத்திருக்க வேண்டும். ஆண்டர்சனின் பெயர் முதலில் தோன்றுவது ஏமாற்றமளிக்கிறது என கவாஸ்கர் கூறினார்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் -டெண்டுல்கர் கோப்பை என கூறப்படுவது சரியில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்ச்சையான புதிய பெயர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரின் பெயரை பட்டோடி டிராபிக்குப் பதிலாக ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி என மறுபெயரிடப்பட்டது. இந்த நூற்றண்டின் இரண்டு சிறந்த வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கௌரவிக்கும் நோக்கில் இருந்தாலும், இந்த புதிய பெயர் மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த முடிவு சரியில்லை என்றும், பலரும் ஆண்டர்சந் டெண்டுல்கர் டிராபியை பெயரிடும் வரிசையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்தார்:
முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் பெயரிடும் முறை குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது குறித்து மிட்-டேக்கு பேட்டி அளித்த கவாஸ்கர், “இதை டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி என்று அழைத்திருக்க வேண்டும். ஆண்டர்சனின் பெயர் முதலில் தோன்றுவது ஏமாற்றமளிக்கிறது. ஆண்டர்சன் ஒரு சிறந்த பந்து வீச்சாளர், ஆனால் அவர் அனைத்து நேர விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார், மேலும் அவர் முதன்மையாக இங்கிலாந்து நிலைமைகளில் சிறந்து விளங்கியுள்ளார். மறுபுறம், டெண்டுல்கர் அனைத்து வடிவ, அனைத்து நிபந்தனைகளையும் கொண்ட ஒரு உலக சாம்பியன். உலகளாவிய கிரிக்கெட்டில் அவரது தாக்கம் மிக அதிகம்.”
கவாஸ்கரின் கருத்துக்கள் மீண்டும் விவாதத்தைத் தூண்டிவிட்டன, பல ரசிகர்கள் இந்த முடிவை 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று அடிக்கடி குறிப்பிடப்படும் டெண்டுல்கருக்கு ஒரு அவமானமாகப் பார்க்கிறார்கள்.
பட்டோடி பதக்கத்தில் மாற்றமில்லை:
தொடரின் பெயரில் மாற்றம் இருந்தபோதிலும், பட்டோடி பதக்கம் வெற்றி பெறும் அணியின் கேப்டனுக்கு தொடர்ந்து வழங்கப்படும், இது பதக்கம் வழங்குவது என்பது அசல் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படும்.
இந்திய அணி நிதான ஆட்டம்:
இதற்கிடையில், ஹெடிங்லியில் முதல் டெஸ்டில் , இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்களை எடுத்தது, இங்கிலாந்து 465 ரன்களை எடுத்தது. பின்னர் நேற்று 3வது நாள் முடிவில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 90/2 ரன்கள் எடுத்து, 96 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது, இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் கே.எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் நிதானமாக ஆடினார், 4வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல் ராகுல் 72 ரன்களுடனும், பண்ட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.






















