டி20 போட்டிகள் கிரிக்கெட்டை அழித்து விடும்; டூபிளசிஸ் எச்சரிக்கை
டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பாப் டுப்ளிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், அந்த நாட்டு கிரிக்கெட் வீரருமான டுப்ளிசிஸ் ஐ.பி.எல் உள்பட பல்வேறு நாட்டு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக உள்ளார்.
இவர் தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அந்த நாட்டின் பெஷாவர் ஜல்மீ அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், அவர் அந்த நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது,
“ உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது. டி20 லீக் போட்டிகள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டே செல்கிறது. இதன் தொடக்க காலங்களில் உலகம் முழுவதுமே 2 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது வருடத்திற்கு 7 லீக் போட்டிகள் வரை நடக்கிறது. லீக் போட்டிகள் வலுவடைந்து வருகின்றன.
எதிர்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும், லீக் போட்டிகளும் எவ்வாறு இணைந்து இருக்க முடியும் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம். எதிர்காலத்தில் ஒரு அணியில் இருந்து இன்னொரு அணி என்று மாறிக்கொண்டே செல்ல வாய்ப்பு உள்ளது. இது உண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அச்சுறுத்தல் ஆகும்.
10 ஆண்டுகளில் கிரிக்கெட் கால்பந்தை போல மாறிவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் லீக்குகளில் வீரர்கள் எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை வரலாம். பல தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் பிரிலான்ஸ் கிரிக்கெட் வீரர்களாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது அந்த நாட்டு அணிகளுக்கு மிகப்பெரிய இழப்பு.
மேற்கு இந்திய கிரிக்கெட் அணிகள்தான் இதை முறையாக முதலில் தொடங்கியவர்கள். ஆனால், அவர்கள் அணி வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டி20 லீக் போட்டிகளுக்கு மாறிவிட்டனர். இதனால், மேற்கு இந்திய தீவுகள் அணி தங்களது முக்கிய வீரர்களை இழந்துவிட்டது. இது தற்போது எங்களது தென் ஆப்பிரிக்கா அணியிலும் நடக்கத் தொடங்கிவிட்டது.” இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல். போன்ற லீக் போட்டிகளால் தங்கள் நாட்டு கிரிக்கெட் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில், ட்வெயின் ப்ரோவா, கீரன் பொல்லார்ட் ஆகியோர் ஐ.பி.எல். போன்ற போட்டிகளில் ஆடுவதால் தற்போது அவர்களது சொந்த நாட்டு அணியில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் அதிரடி மன்னன் டிவிலியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடி வருவதும், சமீபத்தில் அவர் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததை அந்த நாட்டு அணி நிர்வாகம் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கும் சிறுவன்- வைரல் வீடியோ !