IPL 2021: சென்னை vs மும்பை: விசில் பறக்கவிட்ட டாப் 5 சம்பவங்கள் !
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சர்வதேச கிரிக்கெட் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எவ்வளவு முக்கியத்துவம் பெரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்தவகையில் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி அதே அளவிற்கு முக்கியத்துவம் பெரும் என்றால் அது சென்னை-மும்பை போட்டி தான். அந்த அளவிற்கு இப்போட்டி முக்கியத்துவம் பெற காரணம் என்ன?
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பட்டம் வென்ற அணிகள் என்றால் அது சென்னை மற்றும் மும்பை தான். மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். கடந்த 4 ஐபிஎல் தொடரில் சென்னை அல்லது மும்பையே கோப்பையை கைப்பற்றி வருகின்றனர். அதனால் இம்முறையும் கோப்பையை வெல்ல சென்னை-மும்பை அணிகள் இடையே பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் தற்போது வரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் மும்பை 5 போட்டிகளிலும் சென்னை ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.
நடப்பு தொடரில் இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 1 ஒரு தோல்வி மற்றும் 5 வெற்றியை பெற்றுள்ளது. அதேசமயத்தில் மும்பை அணி தற்போது வரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் சென்னை மும்பை அணிகள் மோதிய டாப் 5 சம்பவங்கள் என்னென்ன?
5. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (2020):
2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை-மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் முரளி விஜய், வாட்சன் ஜோடி விரைவில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தது.
எனினும் டூபிளசிஸ் மற்றும் ராயுடு ஜோடி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு 48 பந்துகளில் 71 ரன்கள் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் 2019ஆம் ஆண்டு தொடரில் அடைந்த நான்கு தோல்விகளுக்கு சென்னை அணி பழி தீர்த்துக் கொண்டது.
4. 1 விக்கெட் த்ரில் வெற்றி(2018):
2018ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி விரைவில் ரோகித் சர்மா மற்றும் எவின் லூயிஸ் ஆகியோரின் விக்கெட்டை பறி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன்(40), சூர்யகுமார் யாதவ்(41) மற்றும் குருணல் பாண்ட்யா(41) ஆகியோரின் ஆட்டத்தால் மும்பை அணி 165 ரன்கள் குவித்தது.
இதன்பின்னர் களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்தில் தடுமாறியது. வாட்சன், ராயுடு, ரெய்னா,தோனி என அனைத்து முன்னணி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 12 ஓவர்களில் சென்னை அணி 75 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. எனவே இப்போட்டியை எளிதில் மும்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் பிராவோ அதிரடி காட்ட தொடங்கினார். 30 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் உதவியுடன் 68 ரன்கள் விளாசினார். இதனால் சென்னை அணி 19.5 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
3. 6 விக்கெட் வெற்றி(2015):
2015ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய மும்பை அணி ரோகித் சர்மா(50) மற்றும் பொல்லார்டு(64) ஆகியோரின் அதிரடியால் 183 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மெக்கலம் மற்றும் ஸ்மித் சிறப்பான துவக்கம் அளித்தனர். மெக்கலம் 46 ரன்களும் ஸ்மித் 62 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த சுரேஷ் ரெய்னாவும் 43 ரன்கள் விளாசினார். இதனால் சென்னை 16.4 ஓவர்களிலேயே 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
2. 7 விக்கெட் வெற்றி (2014):
2014ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணியில் ரோகித் சர்மா மட்டும் அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரியளவில் ரன் அடிக்காததால் மும்பை அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் மோஹித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் மெக்கலம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 53 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் விளாசினார்.அத்துடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். சென்னை அணி 19 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
1. ஐபிஎல் இறுதிப் போட்டி வெற்றி(2010):
2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 57* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர்(48)மட்டும் ஒரளவு நிதானமாக ஆடினார். இறுதி கட்டத்தில் பொல்லார்டு அதிரடி காட்ட தொடங்கினார். எனினும் கேப்டன் தோனியின் சிறப்பான நகர்த்தலால் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.