Kohli on Dhoni | இரண்டே வார்த்தைகளில் தோனியுடனான தனது உறவை விவரித்த விராட் கோலி!
கிரிக்கெட் உலகில் களத்திற்கு உள்ளேயும், வெளியேவும் தோனிக்கும் - கோலிக்கும் இடையே நீடித்துக்கொண்டே இருக்கும்உறவைப் பேசியிருக்கிறார் கோலி
இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி தற்போது மும்பையில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றைய தினம் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பல சுவாரசியமான கேள்விகளை ரசிகர்கள் அவர் முன் வைத்தனர், அதில் ஒரு ரசிகர் இரண்டே வார்த்தைகளில் தோனியுடனான உங்கள் உறவை விவரியுங்கள் என்றார்.
ரசிகருக்கு பதிலளித்த கோஹ்லி, தோனி என்றால் "நம்பிக்கை & மரியாதை" என்றார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கீழ் தான் விராட் கோலி தனது கிரிக்கெட் பயணத்தை இந்திய அணிக்காக துவங்கினார். மிக இளம் வயதில் விராட் கோலி அணிக்கு வந்தபோது, அவருடைய ஆக்கிரோஷமான குணாதிசயம் பலர் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் எப்போதும் சாதாரணமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத தோனி தனக்கு நேர் எதிர்மாறான குணத்தை கொண்ட விராட் கோலியை ஆதரித்தார்.
மேலும் கடந்த வருடம் இதே போன்று சமூக வலைத்தளங்களில் விராட் கோலி உரையாடிய போது "நான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் தோனியின் பங்கு மிக பெரியது" என்று தெரிவித்திருந்தார். ஒருமுறை டி20 உலகக்கோப்பை போட்டியில் வெற்றிக்கு ஒரு ரன் தேவை என்ற போது, அந்த ரன்னை விராட் கோலி அடிக்கட்டும் என தோனி விட்டு கொடுத்த சம்பவங்கள் ரசிகர்கள் மனதில் என்றுமே நீங்காதவை.
மேலும் அறிய : ஒரு பந்தில் 6 ரன் - தோனிக்கு எந்த பந்து வீசுவீங்க ? :- பேட் கம்மின்ஸ் சுவாரசியம்!
மற்றொரு முறை விராட் கோலி பேசிய போது "நான் நினைக்கிறன் - தனக்கு (தோனி) பின் கோலி கேப்டன் பொறுப்பை சரியாக செய்வார் என தோனி நம்பினார், அதுவே என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது" என்று தெரிவித்து இருந்தார். இப்படி கிரிக்கெட் களத்திற்கு உள்ளேயும், வெளியேவும் இந்தியாவின் இரண்டு தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களான தோனிக்கும் கோஹ்லிக்கும் இடையேயான உறவு அற்புதமான ஒன்று. அதை ரசிகர் ஒருவரின் கேள்வி மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. தனது நம்பிக்கைக்கும், மரியாதைக்குமான நபர் தோனி என்றுள்ளார் விராட் கோலி.