IND vs ENG: பாதியிலேயே கமெண்ட்ரி செய்வதை நிறுத்திச்சென்ற சுனில் கவாஸ்கர்! காரணம் என்ன?
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே வர்ணனை செய்வதை நிறுத்திவிட்டுச் சென்றார். பாதியிலேயே அவர் சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

வர்ணனை செய்வதை பாதியிலேயே நிறுத்திய கவாஸ்கர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5- டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.
இச்சூழலில் தான் முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களம் இறங்கியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது போட்டி. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் இல்லாமல் இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அந்த வகையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் உள்ளனர்.
வெளியேறியதற்கான காரணம் என்ன?
முன்னதாக, இந்த போட்டியின் போது வர்ணனையாளராக செயல்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் போட்டியின்போது பாதியிலேயே வர்ணனை செய்வதை நிறுத்திவிட்டுச் வெளியே சென்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போட்டியின்போது அவர் பாதியிலேயே வெளியேறியதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது சுனில் கவாஸ்கரின் மாமியார் இன்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் காலமானதால் உடனடியாக அவர் அங்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் வர்ணனை செய்வதை நிறுத்தி விட்டு விசாகப்பட்டிணத்தில் இருந்து உடனடியாக விமானம் பிடித்து கான்பூருக்குச் சென்றுள்ளார் என்ற தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் போட்டியின் இடையில் கவாஸ்கரின் தாயார் இறந்த செய்து கேட்டு அவர் உடனடியாக அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Viral Video: மைதானத்திலே சக வீரருடன் மல்லு கட்டிய பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர்!
மேலும் படிக்க: Viral Video: சிக்ஸர் பறக்க விட்டு சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்...வைரல் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

