Gautam Gambhir: முடிச்சுவிட்டீங்க போங்க... நீங்கதான் கோச்.. உங்களை நம்பிதான் இந்தியா டீமை கொடுக்கனும்!
இந்திய கிரிக்கெட் அணி கவுதம் கம்பீர் பயிற்சி காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது.

2000ம் ஆண்டுக்கு பிறகு ஜாம்பவான் கிரிக்கெட் அணிகளாக திகழ்ந்த ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் எல்லாம் அவ்வப்போது சரிவைச் சந்தித்து ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்து வருகின்றன.
தோல்வி முகத்தில் இந்தியா:
2007 ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது தோல்விகள் இருந்தாலும் ஒரு சாம்பியன் அணியாகவே எப்போதும் எதிரணிக்கு திகழ்ந்து வருகிறது.
ஆனால், சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு கவலைக்குரிய வகையில் இருந்து வருகிறது. சரியாக கூற வேண்டுமென்றால் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றது முதலே இந்த சோகங்கள் அரங்கேறி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பல வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது.
அடி மேல் அடி:
ஆனால், கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு சொந்த மண்ணிலே சோடை போகும் சோகங்கள் எல்லாம் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடியுள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது ஆடி வருகிறது. இதில் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டுமே இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அதுவும் உள்நாட்டில் நடந்த தொடரை ஆகும்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2024ம் ஆண்டு நடந்த தொடரை 3-0 என்ற கணக்கில் சொந்த நாட்டிலே இழந்து மோசமான வரலாற்றை தனக்குரியதாக மாற்றிக் கொண்டது. தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
எப்படி இருந்த இந்திய அணி?
இங்கிலாந்து மண்ணில் 2-2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது என கம்பீருக்கு ஆதரவாக புள்ளிகளை எடுத்து வைத்தாலும், இந்திய அணி வெற்றி பெற்ற 2 மைதானங்களும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பது அந்த போட்டியைப் பார்த்தவர்களுக்கு தெரியும். முதல் டெஸ்ட்டில் அபாரமாக வென்று ஆஸ்திரேலியாவில் தொடரை தொடங்கிய இந்தியா அடுத்த 4 டெஸ்டில் 3 போட்டிகளில் தோற்றது.
சச்சின், கங்குலி, சேவாக், வாசிம் ஜாபர், லட்சுமணன், ராகுல் டிராவிட், விராட் கோலி, புஜாரா என இந்திய டெஸ்ட் பேட்டிங்கை கடந்த 20 ஆண்டுகளில் வலுவாக வைத்திருந்த நிலையில், தற்போது இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கும் மாறிக்கொண்டே போகிறது.
கோலி, ரோகித்தான் காலி:
கம்பீரின் சாதனை என்று பார்த்தால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தது மட்டுமே என்று தற்போதைய புள்ளிவிவரங்கள் சொல்கிறது. தற்போது இந்திய அணியையும் முடித்துவிடும் வேலையையே அவர் செய்வதாக தெரிகிறது.
தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இருந்தாலும் அந்த அணி வீரர்கள் பெரும்பாலானோருக்கு இந்திய மண்ணில் டெஸ்ட் ஆடிய அனுபவம் இல்லை. கே.எல்.ராகுல்,பும்ரா, சிராஜ், ரிஷப் பண்ட், சுப்மன்கில், ஜடேஜா ஆகியோரை வைத்துக் கொண்டு இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
இவங்கதான் கோச்:
இந்திய அணிக்கு ஜான் ரைட், ரவி சாஸ்திரி, கேரி கிறிஸ்டன், ப்ளெட்சர், கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளனர். அவர்கள் அணி தேர்விலோ, கேப்டன் முடிவிலோ தலையிடவில்லை. இதன் காரணமாகவே இந்திய அணி இவர்கள் பயிற்சியாளராக இருந்த காலத்தில் அதிக வெற்றிகளையும், கோப்பைகளையும் குவித்தது. மேலும், எந்தவொரு வீரர்களும் அணியை விட்டு வெளியேற இவர்கள் காரணமாகவும் இல்லை. ஆனால், கம்பீர் மீது இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் உள்ளது.

ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக இருந்து வென்று கொடுத்தார் என்ற காரணத்திற்காக முன்னாள் வீரரான கம்பீருக்கு பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவரது பயிற்சியில் இந்திய அணி இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 போட்டிகளில் தோற்றுள்ளது. 7 டெஸ்ட் போட்டிகளில்தான் வென்றுள்ளது. அதில் 4 போட்டிகள் வங்கதேசத்திற்கும், வெஸ்ட் இண்டீசுக்கும் எதிராக ஆகும்.
கம்பீர் பயிற்சியாளராக தனது பணியில் உள்ள தவறுகளை திருத்தினால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.




















