PCB - ICC Trophy: பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு இடி.. பறிபோகிறதா சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் வாய்ப்பு..?
பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை வேறு இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரை, வேறு இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி தொடர்:
கிரிக்கெட் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றாலும், அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் தொடர்கள் மிகவும் முக்கியத்துவமானது. அந்த வகையில் ஒருநாள் உலகக்கோப்பை, டி-20 உலகக்கோப்பை, சாம்பியன்ஷ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தி வருகிறது. அந்த வரிசையில் அடுத்தடுத்து நடத்தப்பட உள்ள ஐசிசி தொடர்களுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஐசிசி தொடர்கள்..
அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்து சர்வதேச நாடுகள் பங்கேற்கும் தொடர்கள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வாய்ப்பை இழக்கும் பாகிஸ்தான்?
இந்த நிலையில் தான் டி-20 உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துவதற்கான இடங்களை மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
அமெரிக்காவின் தற்போதைய உள்கட்டமைப்பு நிலைமை மிகவும் ஊக்கமளிப்பதாக இல்லை எனவும், வரவிருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட்டை அவர்கள் வெற்றிகரமாக நடத்தினாலும், டி20 உலகக் கோப்பை போன்ற ஒரு நிகழ்வை நடத்துவது முற்றிலும் வித்தியாசமான பந்து விளையாட்டாகும் என கூறி, அமெரிக்காவில் டி-20 உலகக்கோப்பையை நடத்த ஐசிசி மறுப்பதாக கூறப்படுகிறது.
அதேநேரம், சாம்பியன்ஷ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றால், அதில் இந்தியா பங்கேற்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு, அந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காவிட்டால், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு பெரும் இழப்பு ஏற்படும். இதனால், அடுத்தடுத்த தொடர்களை நடத்தும் இடங்களை மாற்றும் முனைப்பில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டிற்கு போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில், அந்த இடத்தில் போட்டிகள் நடத்த வேண்டாம் என ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள நிறுவனங்களும் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டிகள் எங்கு நடத்தப்படும்?
புதிய தகவல்களின்படி, 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த 50 ஓவர்கள் சாம்பியன்ஷிப் தொடர் மேற்கிந்திய தீவுகளுக்கு மாற்றப்படும் எனவும், அடுத்த ஆண்டு அந்த நாட்டில் நடைபெற இருந்த டி-20 உலகக்கோப்பை தொடர் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.