ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
தமிழ்நாட்டில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன எனவும் இவர்கள் நாகரிகம் பற்றி பேசலாமா எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரியாக சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறுகின்றன எனவும் இவர்கள் நாகரிகம் பற்றி பேசலாமா எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரியாக சாடியுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், “திமுக எம்.பி ராணி ஸ்ரீகுமார் கல்வி பற்றி பேசினார். தமிழ் பற்றி பேசினார். நாங்கள் 4000 ஆண்டுகளாக நாகரிகம் பற்றி பேசுகிறோம். நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் அவர் பேசினார்.
மணிப்பூர் விவகாரம், தமிழர் நாகரிகம், பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் பெண்களின் நலனை முன்னிறுத்தி திமுக அரசு செயல்படுவதாக பேசினார். நிர்பயா நிதி பற்றியும் பேசினார்.
அதே தமிழ்நாட்டில் நாகரீகம், பெண்ணுரிமை, இலவச பஸ்பாஸ் கொடுக்கிறோம் என சொல்கிறவர்கள் 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபையில் ஜெயலலிதா அம்மையாரின் புடவையை பிடித்து இழுத்தவர்கள் இவர்களை சேர்ந்தவர்கள்.
இவர்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்தான் ஒரு பெண்ணின் புடவையை பிடித்து இழுத்தார். நான் இங்கு யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இதுதான் இவர்களின் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு.
இலவச பேருந்து பாஸ் கொடுத்தால் மட்டும் போதாது. பெண்களை அவமதிக்காமல் இருக்க வேண்டும். அதை நீங்கள் செய்யவில்லை.
டிசம்பர் 23ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுவரை தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாட்டில் 28 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இவர்கள் சமத்துவம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் மாற்று சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் கொலை செய்யப்படுகிறார்கள். இதுவா திராவிட மாடல்?
திருச்சியில் 9 வயது சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆனால் நாகரிகம், கலாச்சாரம் பற்றி எங்களுக்கு கற்று கொடுக்க வேண்டாம் என சொல்கிறார்கள்.
கடந்த ஆண்டு தஞ்சாவூரில் 22 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசில் பெண்கள் இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் 68 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
போதைப்பொருள் கடத்தலில் பிரபலமான குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிலும் திமுக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. போதைப்பொருள் வாங்க தாய் பணம் கொடுக்கவில்லை என்று மகன்களே தாயை கொலை செய்கிறார்கள். அந்த சம்பவங்களும் அரங்கேறுகின்றன. என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என கேள்வி எழுப்பினார்.






















