Minister ponmudi: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய நபர் கைது - யார் அவர்?
பெஞ்சல் புயல் பாதிப்பின்போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் பாஜக மகளிரணி விழுப்புரம் மாவட்ட தலைவர் விஜயராணியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் பாதிப்பின்போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் பாஜக மகளிரணி விழுப்புரம் மாவட்ட தலைவர் விஜயராணியை திருவெண்னைய்நல்லூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பெய்த மழையை தமிழக அரசு கட்டுக்குள் வைத்தது. ஆனால் அதைத்தொடர்ந்து விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அப்பகுதிகள் முழுக்க முழுக்க வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏரிகள் நிரம்பி வழிவதால் சாத்தனூர் அணையை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்த புயலினால் அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி பாதிக்கப்பட்ட பகுதியில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி ஆட்சியராக இருந்த பழனி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினருமான ராமகிருஷ்ணன், அவரது தாய் விஜயராணி ஆகிய இருவரும் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதமசிகாமணி ஆகியோரின் மீது சேற்றை வீசியெறிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி மற்றும் திமுகவினரை, பொதுமக்களிடம் இருந்து மீட்டு பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியெறிந்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்ட 2 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். அவரது தாயார் தலைமறைவாக இருந்ததால் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று பாஜக விழுப்புரம் மாவட்ட மகளிரணி முன்னாள் துணை தலைவி விஜயராணியை அமைச்சர் மீது சேற்றை வாரி வீசிய வழக்கில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.




















