வார இறுதியில் ஊருக்குப் போறீங்களா? சென்னையில் இருந்து இவ்வளவு பேருந்துகளா? எப்படி புக் செய்வது?
Chennai Special Bus: சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் கோடிக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை நாட்கள் மட்டுமின்றி வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.
வெளியூருக்கு பேருந்துகள்:
இந்த நிலையில், வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இந்த வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் நாளை மறுநாள் (14ம் தேதி) 270 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு, மாதவரத்திலும் சிறப்பு பேருந்துகள்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்ளுக்கு நாளை மறுநாளான வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை 51 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு மட்டுமின்றி மாதவரத்தில் இருந்தும் நாளை மறுநாள் மற்றும் சனிக்கிழமை 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையில் பயணிக்க 4 ஆயிரத்து 896 பயணிகளும், சனிக்கிழமையில் 2 ஆயிரத்து 381 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமையில் 6 ஆயிரத்து 20 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் முன்பதிவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் போக்குவரத்து கழகம் எதிர்பார்க்கிறது. பயணிகள் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், போக்குவரத்து கழக செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருவண்ணாமலைக்கு 350 பேருந்துகள்:
மேலும், இது மட்டுமின்றி மாசி மாத பெளர்ணமி நாள் நாளை என்பதால் திருவண்ணாமலைக்கு நாளை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 350 கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோடை மாதத்தை முன்னிட்டு விரைவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதால் வரும் வாரங்களில் அரசுப் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வருவதை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்ல பயணிகள் அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு அதிகளவு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்லும் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் அதிகளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
ALSO READ | சென்னை உதயம் தியேட்டர் இருந்த இடத்துல என்ன வருதுன்னு தெரியுமா.? கேட்டா அசந்து போய்டுவீங்க...





















