Kohli: இந்தியா அபார வெற்றி.. அடித்தது ஜெமிமாவா? கோலியா.. குழப்பதில் பாகிஸ்தான் ரசிகர்கள்
மகளிர் டி-20 உலககக்கோபை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடித்த ஷாட்கள் கோலியை போன்றே இருப்பதை குறிப்பிட்டு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வீடியோ வெளியிட்டுள்ளது.
மகளிர் டி-20 உலககக்கோபை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அடித்த ஷாட்கள், கோலியை போன்றே இருப்பதை குறிப்பிட்டு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வீடியோ வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ஜெமிமா ரோட்ரிக்ஸின் அரைசதத்தால் வெற்றி பெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்
மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்ரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி, 149 ரன்களை சேர்த்தது.
இந்திய அணி சேஸிங்:
இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, பாட்டியா மற்றும் ஷஃபாலி வர்மா நல்ல தொடக்கத்தை அளித்தனர். அவர்களை தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 பந்துகளுக்கு 53 ரன்கள் சேர்த்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 31 ரன்கள் சேர்க்க, 19 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
View this post on Instagram
ஜெமிமா ரோட்ரிக்ஸா? கோலியா?
இந்த போட்டியில் 38 பந்துகளை எதிர்கொண்ட ரோட்ரிக்ஸ் 8 பவுண்டரிகள் உட்பட 53 ரன்களை சேர்த்தார். அவ்வாறு அவர் அடித்த ஷாட்கள் கடந்த ஆண்டு நடைபெற ஆடவர் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோலி அடித்த ஷாட்களை பிரதிபலித்தது போன்றே இருந்தது. ஆடவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப் சைட், ஸ்கொயர் மற்றும் லாங் ஆன் திசைகளில் கோலி அடித்ததை போன்ற, அதே ஷாட்களை அதே திசையில் அடித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவர்களது வெற்றி கொண்டாட்டமும் ஒரே மாதிரியாக இருந்தது. இதை குறிப்பிட்டு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமும் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.
கோலி வாழ்த்து:
இதனிடையே, பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான அதிக அழுத்தம் மிகுந்த, கடினமான சேஸிங் போட்டியில் இலக்கை எட்டி வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள் என கோலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ”விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பெண்கள் அணி இதுபோன்ற மாபெரும் சாதனைகளை முன்னெடுத்துச் செல்கிறது. இது அடுத்த தலைமுறை பெண்களை விளையாட்டில் ஈடுபடவும், மகளிர் கிரிக்கெட்டை மேலும் மேலும் உயர்த்தவும் ஊக்குவிக்கும். உங்கள் அனைவருக்கும் மேலும் பலம் சேரட்டும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என கோலி குறிப்பிட்டுள்ளார்.