ED Raid: மதுபான ஆலையில் அமலாக்கத்துறை ரெய்டு; சிக்கிய முக்கிய ஆவணங்கள்
அமலாக்கத்துறையை சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான தயாரிக்கும் ஆலையில் சோதனை நடத்தி வருகின்றனர்

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழ்நாட்டில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், மெஸ் உரிமையாளர்கள், மதுபான ஆலைகள், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் கோதை நகர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டில் கேரளா, தெலுங்கானா மாநில பாதுகாப்பு காவலர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் 80 அடி சாலை பகுதி அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான இடங்களில் ரெய்டு
தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக சென்னை பாண்டிபஜாரில் உள்ள நிறுவனத்திலும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட 12 இடங்களில் எஸ்.டி.பி.ஐ., அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை ரெய்டு
இந்த நிலையில் எம்ஜிஎம் (MGM) நிறுவனத்திற்கு சொந்தமான விழுப்புரம் மதுபான ஆலையில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையை சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான தயாரிக்கும் ஆலையில் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான ஆலையில் தயாரிக்கப்படும் மதுபான பாட்டில்களை தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரிலும், அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு சட்ட விரோத பணப்பரிவினை நடைபெற்று இருக்கிறதா என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.
மதுபானத்துறையில் நடக்கும் நிதி முறைகேடுகள்
மதுபானத் துறையில் நிதி முறைகேடுகள் குறித்த தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பணமோசடி, நிதி தவறாக நிர்வகிக்கப்படுதல் மற்றும் மதுபான வணிகங்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையிலான தொடர்புகளை அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது.
தமிழகத்தின் ஆளும் கட்சியாக உள்ள திமுக எம்பியின் நிறுவனத்தின் தொடர்பு மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த சோதனைகள் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்கிடையே, டாஸ்மாக்கை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளிலும் இன்று காலை முதல் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

