"கட்டுமானங்கள் அதிகமாகிடுச்சு.. “ : கிரிக்கெட் மைதானத்திற்குள் பாம்பு.. அஷ்வின் சொன்னது இதுதான்
இது குறித்து பேசிய இந்தியாவின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், இலங்கை காடுகளால் சூழப்பட்டுள்ளது, அதனால் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்றார்.
இலங்கையில் லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. அதில் சுவாரஸ்யமான போட்டிகள் பலவற்றை ரசிகர்கள் இதுவரை கண்டுள்ளனர். பவர்-ஹிட்டிங் அதிரடி முதல் லோ ஸ்கோரிங் திரில்லர் வரை ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்து வருகிறது. ஆட்டம் மட்டுமின்றி அதனை சுற்றி நடக்கும் விஷயங்களும் பலரையும் கவனிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி சமீபத்திய போட்டி ஒன்றில் மைதானத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்லும் பயங்கரமான வீடியோ வைரல் ஆனது. பி-லவ் கண்டி மற்றும் யாழ் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது மைதானத்தில் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதைக் கண்டு வீரர்கள் திகைத்து நின்றனர்.
Snake in LPL...!!!!
— Johns. (@CricCrazyJohns) August 13, 2023
A lucky escape for Udana. pic.twitter.com/R3Gg2yxVkh
லங்கா பிரீமியர் லீக்கில் பாம்பு
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், யாழ்ப்பாணம் அணி சேசிங்கின் போது, பாம்பு ஒன்று மைதானத்தில் இறங்கியது. மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இசுரு உடானாவின் அருகில் பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதனை சட்டெனக் கண்ட அவர் ஒரு அடி பின்னே சென்றார். பின்னோக்கி நடந்து வந்துகொண்டிருந்த அவர் அதனை பார்க்காமல் இருந்தால் மிதித்திருப்பார்.
இது குறித்து பேசிய இந்தியாவின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், "இலங்கை காடுகளால் சூழப்பட்டுள்ளது, அதனால் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது" என்றார்.
சம்பவம் குறித்து பேசிய அஷ்வின்
"சமீபத்தில் ஒரு போட்டியின்போது இசுரு உடானாவின் அருகில் பாம்பு சென்ற வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த விளையாட்டில் பாம்பு அவருக்கு மிக அருகில் சென்றது. நான் பாம்புகள் விஷயத்தில் நிபுணன் அல்ல, அது விஷப்பாம்பா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அந்த வீடியோவில் இருந்த பாம்பு, விஷப் பாம்பு இல்லை என்று கமேண்டில் பலர் கூறியிருந்தனர்," என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
கட்டுமானங்கள் அதிகரித்துவிட்டன
"கிரிக்கெட் மைதானத்தில் பாம்பை கண்டால் எந்த வீரரும் நிச்சயம் பயப்படுவார். கிரிக்கெட் அதிகாரிகள் இதற்கு என்ன செய்ய முடியும் என்ற கேள்வி உள்ளதல்லவா. ஏனென்றால், வனவிலங்குகள் வசிக்கும் இடங்களில் நாம் பல விஷயங்களைக் கட்டுகிறோம். மேலும், இலங்கை காடுகளால் சூழப்பட்ட இடம். அதிகாரிகள் இதைப் பற்றி ஏதாவது செய்ய முடிந்தால், அது உண்மையில் விலங்குகளுக்கும் நல்லது. வீரர்களுக்கும் நல்லது," என்று அவர் மேலும் கூறினார்.