IND vs BAN 1st Test:வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்.. குல்தீப் யாதவ் - அக்சர் படேலுக்கு இடம் கிடைக்குமா? ரோஹித்தின் ப்ளான் என்ன?
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி. இதற்காக இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் பிசிசிஐ ஏற்பாடு செய்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, பங்களாதேஷுக்கு எதிரான தொடரை வென்றால், தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பிடிப்பதற்கான சூழல் உருவாகும்.பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் வீரர்களின் உடற்தகுதி குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை டெஸ்ட் தொடருக்கான மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் கடினமான சூழல் நிலவுகிறது.
டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் பவுன்ஸுக்கு பெயர் பெற்றது சென்னை சேப்பாக்கம் மைதானம். இதன் காரணமாக, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஐந்து பந்து வீச்சாளர்களை இந்திய அணி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் சுழற்பந்து வீச்சுக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதேபோல் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இடம் பெறுவார்கள்.
மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் யார்?
மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேர்வு யாஷ் தயாள் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவும். இந்த வியூகம் பின்பற்றப்பட்டால், குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் ஆகியோர் 'மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக' விளையாடும் லெவன் அணியில் இடம்பெற மாட்டார்கள்.
இச்சூழலில் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், "இந்திய அணி அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைத்தான் பயன் படுத்தும். அதே நேரம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும்"என்று கூறியுள்ளார். ஒரு வேளை ரோஹித் ஷர்மாவின் ப்ளான் இதுவாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.