2021 ஐபிஎல்: ஹைதரபாத் வெற்றிக்கணக்கை தொடங்குமா? சென்னை ஹாட்ரிக் வெற்றிபெறுமா..?
பஞ்சாப் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி கணக்கை தொடங்குமா? கே.கே.ஆர் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும், இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கமுடியாமல் தள்ளாடி வருகிறது. அந்த அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியையே தழுவியதால் இன்றைய போட்டியில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே நன்றாக ஆடி வருகின்றனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பவுலிங்கிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. கடந்த இரண்டு போட்டிகளில் 145 ரன்களை கூட தாண்டவில்லை. இந்த தவறை எல்லாம் திருத்திக்கொண்டு ஹைதராபாத் அணி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. அதன்பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பவுலிங்தான் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதுவரை, மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடிய நிலையில், தற்போது, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் மந்தமான தன்மை கொண்டதால், அதில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அணி திட்டமிட்டு செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். இரண்டு அணிகளுமே தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என தெரிகிறது. இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஹைதராபாத் 11 போட்டிகளிலும், பஞ்சாப் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மற்றொரு போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைர் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்த இரண்டு போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளை துவம்சம் செய்தது. சாம் கரன், மொயின் அலி, ஜடேஜா, டு பிளிசஸ் நன்றாக விளையாடி வருகின்றனர். தோனி, ருதுராஜ் இன்னும் தனது பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் உள்ளனர். சாஹர், ஷர்துல் தாக்கூர் பவுலிங்கில் மிரட்டினால். கொல்கத்தாவின் அதிரடி ஆட்டம் அடங்கிப்போக வாய்ப்புள்ளது.
கொல்கத்தா அணி முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தாலும், அடுத்த போட்டியில் மும்பையிடம் மோசமாக தோல்வியடைந்தது. இதற்காக அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரினார். அதற்கடுத்த ஆட்டத்தில் பெங்களூர் அணியிடமும் தோல்வியை சந்தித்தது. சென்னை பிட்சும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அணியின் கேப்டம் மோர்கன் புலம்பினார். தற்போது, மும்பை வான்கடே மைதானத்தில் களம் இறங்குகின்றனர். எனவே, இதை அவர்கள் சாதகமாக அமைத்துக்கொள்ள வேண்டும். சென்னை ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடனும், கொல்கத்தா தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் விளையாடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கலாம். இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 22 மோதியுள்ளன. இதில், 14-இல் சென்னையும், 8ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்றுள்ளன.