Sabarimala Malai: ஐயப்ப பக்தர்களே.. சபரிமலைக்கு மாலை போட்டால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
Sabarimala: சபரிமலைக்கு மாலை அணிபவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில். உலகப் புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். குறிப்பாக, கார்த்திகை மாதம் மட்டும் லட்சோப லட்ச பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வார்கள்.
சபரிமலைக்கு மாலை அணிந்து செல்பவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
என்ன செய்ய வேண்டும்?
1. ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் கடுமையான பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை அணிவதன் சிறப்பம்சமே அதில்தான் உள்ளது.
2. ஐயப்பனின் படம் அல்லது சிலைக்கு மலர்கள் கொண்டு தினமும் பூஜை, நைவேத்யம் செய்ய வேண்டும். அந்த பூஜையில் ஏதாவது ஒரு பழம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. அதிகாலை வேளையை சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் தொடங்க வேண்டும்.
4. பூஜையின்போது தினசரி ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்று பக்தர்கள் வழிபட வேண்டும்.
5. ஐயப்பன் மட்டுமில்ல எந்த கடவுளுக்கு மாலை அணிந்தாலும் சைவம் மட்டுமே சாப்பிட வேண்டும். அசைவம் தவிர்க்க வேண்டும்.
6. ஒரு வேளை மட்டுமே விரதம் இருப்பவர்கள் இருப்பார்கள். விரதத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். உடல்நலக்குறைவாக இருப்பவர்கள் அதற்கேற்ப கடைபிடிக்கலாம்.
7. ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் கருப்பு உடை அணிவார்கள். சிலர் காவி உடை அணிவதும் உண்டு.
8. பணிகளை முடித்து வீடு திரும்பியதும் மீண்டும் குளித்துவிட்டு ஐயப்பனுக்கு விளக்கேற்றி பூஜையை முடித்த பிறகே இரவு உணவு சாப்பிட வேண்டும்.
9. ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் பிறரை சாமி என்று அழைப்பது வழக்கம்.
10. கன்னிசாமியாக இருப்பவர்கள் வீட்டில் பூஜை நடத்த வேண்டும்.
என்ன செய்யக்கூடாது?
1. ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் கண்டிப்பாக காலணி அணியக்கூடாது.
2. ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதால் மாலை அணிந்துள்ள காலத்தில் தாம்பத்ய உறவு கூடாது.
3. மாலை அணிந்துள்ள காலத்தில் மது, புகைப்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடவே கூடாது.
4. சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளவர்கள் அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.
5. ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ள காலத்தில் இறை சிந்தனை தவிர வேறு ஏதேனும் தவறான எண்ணங்கள் இருக்கவே கூடாது.
நடப்பாண்டில் கார்த்திகை மாதம் வரும் நவம்பர் 17ம் தேதி பிறக்கிறது. பிரதோஷ நாளாக மட்டுமின்றி சோமாவார திங்கள் கிழமையில் கார்த்திகை மாதம் பிறக்கிறது.
சிவபெருமானுக்கு உகந்த திங்கள்கிழமையில் பிறக்கும் இந்த கார்த்திகை முதல் நாளில் லட்சக்கணக்கானோர் மாலை அணிந்து கொள்வார்கள். அந்த நாளில் ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாலை அணிந்து கொள்ளலாம். குருசாமி கையாலோ, வீட்டில் தாய் கையாலோ அல்லது கோயிலிலோ மாலை அணிந்து கொள்வது சிறப்பாகும்.





















