மயிலாடுதுறையில் தோளில் சுமந்த தேர் - பக்தி பரவசத்தில் தீ குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்
மயிலாடுதுறை கடுவங்குடி சீதளா மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் வீதி உலா மற்றும் தாமரைக்குளம் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழா
சித்திரை மாதத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக களைகட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு கோயில்களில் இந்த ஆண்டு சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடுவங்குடியில் பழமை வாய்ந்த அருள்மிகு அன்னை ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மகோத்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு உற்சவம் கடந்த ஏப்ரல் 14 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு விழாக்களும், அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெற்று வந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 16 -ஆம் விழாவான திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, மகா தீபாராதனை காட்டப்பட்டு திருத்தேரோட்டம் துவங்கியது. இதில் திரளான பக்தர் பங்கேற்று திருதேரை தங்கள் தோலில் சுமந்து கொண்டு வீதி உலா வந்தனர். கிராம மக்கள் அனைவரும் வீதி உலாவாக வந்த அம்பாளுக்கு தங்கள் வீடுகள் தோறும் பழங்கள், மாலை, புடவை, சுண்டல் போன்ற நெய்வேத்திய பொருள்களை வைத்து படையல் இட்டு வழிபாடு நடத்தினர்.
தாமரைகுளம் மகா மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ தாமரைகுளம் மகா மாரியம்மன் ஆலயமானது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 14 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழாவானது துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பால்குடம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு காவிரிக்கரையில் இருந்து மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, காளி நடனத்துடன் சக்தி கரகம் முன்னே செல்ல ஊர்வலமாக பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டனர் .
BJP on Prajwal: பாஜக கூட்டணி பிரஜ்வால் பாலியல் வீடியோ விவகாரம்: அமித் ஷா பரபர கருத்து!