BJP on Prajwal: பாஜக கூட்டணி பிரஜ்வால் பாலியல் வீடியோ விவகாரம்: அமித் ஷா பரபர கருத்து!
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது. ஏன் இதுவரை பிரஜ்வால் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஜனதா தள எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வீடியோக்கள் வெளியான விவகாரத்தில், பாஜக மூத்த அமைச்சர் அமித் ஷா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவாக பாஜக இருக்கிறது. கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? காங்கிரஸ் கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது. ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?
மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்
இது மாநிலத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சினை என்பதால், நாங்கள் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. மாநில அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாங்கள் விசாரணைக்கு ஆதரவாகவே இருக்கிறோம். எங்களுடைய கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இன்று அக்கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பின்னணி இதுதான்!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், தற்போதைய ஹசன் தொகுதியின் எம்.பி.யுமாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலிலும், பாஜக கூட்டணி சார்பில் ஹசன் தொகுதியில் அவர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
#WATCH | On 'obscene videos' case involving JD(S) MP Prajwal Revanna, Union HM Amit Shah says, "BJP's stand is clear that we stand with the 'Matr Shakti' of the country. I want to ask Congress, whose government is there? The government is of Congress Party. Why they have not… pic.twitter.com/bAZYw7i1oi
— ANI (@ANI) April 30, 2024
இந்த நிலையில் அவர் ஏராளமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படும் பல பெண்கள் இருக்கும், ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. இந்த வீடியோக்கள் அடங்கிய ஏராளமான பென் ட்ரைவ்கள் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் மைதானம் போன்ற பல பொது இடங்களில் தூக்கி வீசப்பட்டு இருந்தன.
சிறப்பு புலனாய்வுக் குழு
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மாயமானார். அவர் ஜெர்மனிக்குத் தப்பியோடியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கட்சியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித் ஷா கருத்துத் தெரிவித்துள்ளார்.