(Source: Poll of Polls)
புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
விழாவின், முக்கிய நிகழ்வுகளாக, இன்று மாலை திருக்கல்யாண உற்சவமும், ஜூன் 2ம் தேதி வெண்ணை தாலி திருக்கோலமும் நடைபெறுகின்றன.
புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரியிலுள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கடந்த 25ம் தேதி திருமஞ்சன நிகழ்ச்சியுடன் துவங்கியது. புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் காந்திமதி வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலின் விழாக்களில் வைகாசி பிரமோற்சவம் முக்கியமானதாகும். அதன்படி, விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து, தினமும் காலை திருமஞ்சனமும், இரவில் பல்வேறு சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது.
கடந்த 26ம் தேதி ஹம்ச வாகனத்திலும், 27ம் தங்க சிம்ம வாகனத்திலும், 28ம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 29ம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று இரவு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின், முக்கிய நிகழ்வுகளாக, 31-ஆம் தேதி இன்று மாலை திருக்கல்யாண உற்சவமும், ஜூன் 2-ஆம் தேதி வெண்ணை தாலி திருக்கோலமும் நடைபெறுகின்றன. தொடா்ந்து ஜூன் 3- ஆம் தேதி காலை தேரோட்டம், ஜூன் 4-ஆம் தேதி காலை 108 கலச திருமஞ்சனம், ஜூன் 5-ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும், ஜூன் 9-ஆம் தேதி மாலை பானக பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்