Aadi Offer: ஆடித்தள்ளுபடி என்னும் கான்செப்ட் ஏன் வந்தது தெரியுமா? இதுதான் காரணம்..!
Aadi Offer: ஆடி மாதம் வந்துவிட்டாலே கடைகள், வணிக வளாகங்களில் ஆடித்தள்ளுபடி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் 17-ந் தேதி பிறக்க உள்ளது. ஆடி மாதம் என்றாலே கோயில்களில் விழாக்கோலமாக காணப்படும். ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுதல், பல ஊர்களில் திருவிழாக்கள் என களை கட்டி காணப்படும்.
ஆடி மாதம்:
ஆடி மாதத்தில் பக்தர்களாக மட்டுமின்றி வாடிக்கையாளர்களாகவும் மக்கள் உற்சாகமாக இருப்பார்கள். காரணம், ஆடி மாதம் என்றாலே கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும். தற்போது இணையதள வர்த்தகமான ஃப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்களும் ஆடித்தள்ளுபடி சலுகையை அறிவிப்பது வழக்கம்.
ஆடித்தள்ளுபடி என்றாலே மக்களுக்கு தனி உற்சாகம் பிறந்துவிடும். அப்பேற்பட்ட ஆடித்தள்ளுபடி எவ்வாறு உருவானது என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா..? அதற்கான காரணத்தை கீழே விரிவாக காணலாம்.
ஆடித்தள்ளுபடி:
ஆடி மாதம் என்றாலே முதலில் அது விவசாயிகளுக்கான மாதம்தான். அதன் காரணமாகவே ஆடிப்பட்டம் தேடி விதை என்று கூறினர். அப்பேற்பட்ட ஆடி மாதத்தில் விவசாயிகள் நிலத்தை உழுவதிலே மிகவும் மும்முரமாக இருப்பார்கள். நெல், கரும்பு என பயிர்களை பயிரிடுவதற்காகவே தனது கையில் இருந்த பெரும்பாலான தொகைகளை செலவழித்து இருப்பார்கள். அவ்வாறு தனது கையில் இருந்த பெரும்பாலான பணத்தை விவசாயத்திற்காகவே செலவு செய்திருக்கும் காரணத்தால், விவசாயிகளிடம் தேவையான அளவு பணம் இருக்காது.
இதனால், அவர்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படும். இதன் காரணமாகவே, விவசாயிகளின் நலன் கருதி கடைகளில் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினர். அப்படியே ஆடித் தள்ளுபடி உருவானது. இன்று வரை அதை தமிழ்நாட்டில் கடைபிடித்து வருகின்றனர்.
ஆடி மாதம் பிறந்து விட்டாலே ஆடித்தள்ளுபடியில் பெரும்பாலான பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்பதால் மக்களும் அதை வாங்குவதற்காக ஆர்வம் காட்டுவார்கள். இதனால், ஆடி மாதங்களில் துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், செல்போன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வர்த்தகம் வழக்கத்தை விட அதிகளவில் நடைபெறும்.
இந்த ஆடித்தள்ளுபடியிலும் வழக்கம்போல வர்த்தகம் அதிகளவில் நடைபெறும் என்று வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மேலும் படிக்க: Aadi Amavasai 2023: இந்த ஆடியில் 2 அமாவாசை.. எந்த நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது? இதோ பாருங்க..!
மேலும் படிக்க: திருமணத்தடை நீங்க ஆலயத்தை சுற்றி வந்த பக்தர்கள்; சேத்திரபாலபுரத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு