Aadi Amavasai 2023: இந்த ஆடியில் 2 அமாவாசை.. எந்த நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது? இதோ பாருங்க..!
Aadi Amavasai Tharpanam 2023: நடப்பாண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருவதில் எந்த அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது என்ற குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
Aadi Amavasai Tharpanam 2023: ஆன்மீக தினங்கள் அதிக மாதங்களாக இருப்பது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிழமையுமே சிறப்பு வாய்ந்தது ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அன்றைய தினம் நமது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிப்பது வழக்கம் ஆகும்.
ஆடி மாதத்தில் 2 அமாவாசை:
நடப்பாண்டில் வரும் ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வருகிறது. வழக்கமாக, இதுபோன்று ஒரு மாதத்தில் 2 அமாவாசைகள் வரும் மாதத்தை விஷ மாதம் என்றே பஞ்சாங்கத்தில் கூறுவார்கள். மேலும், ஒரு மாதத்தில் 2 பௌர்ணமிகள் வந்தால் அதை சிறப்பு மாதம் என்று அழைப்பார்கள்.
2023ம் ஆண்டான நடப்பாண்டில் ஆடி மாதம் வரும் ஜூலை மாதம் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜூலை மாதம் 17-ஆம் தேதி தொடங்கும் ஆடி மாதம் வரும் ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முடிகிறது. இந்த ஆடி மாதத்தில் ஆடி மாதத்தின் முதல் நாளான வரும் ஜூலை 17-ஆம் தேதியே அமாவாசை வருகிறது. அதேபோல, ஆடி இறுதியில் வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் அமாவாசை வருகிறது.
எந்த அமாவாசையில் தர்ப்பணம் தருவது?
இந்த இரண்டு அமாவாசையில் எந்த அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிக்கலாம் என்று பக்தர்களுக்கு சந்தேகம் ஏற்படலாம். வழக்கமாக, இதுபோன்ற மாதங்களில் முதலில் வரும் அமாவாசையை காட்டிலும் 2வது வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்று ஆன்மீக பெரியோர்களும், ஜோதிட நிபுணர்களும் கூறுகின்றனர்.
இதனால், வரும் ஆகஸ்ட் 16-ந் தேதி வரும் அமாவாசை தினத்திலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரைகளில், ஆற்றுப்பகுதிகளில், கோயில் குளங்களில் திதி, தர்ப்பணம் அளிப்பது சிறந்தது ஆகும். ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் அருகே உள்ள கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் மக்கள் அலைகடலென திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி அளிப்பதற்காக குவிவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக, ஒரே மாதத்தில் இதுபோன்ற 2 அமாவாசை, 2 பௌர்ணமி வரும்போது சிலர் அந்த மாதங்களில் சுபகாரியங்களை தவிர்த்துவிடுவார்கள். பொதுவாக விஷ மாதத்தில் திருமணத்தை தவிர இதர சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளலாம். ஆனாலும், தனிப்பட்ட ஜாதக பலன்கள், ஜோதிட பலன்கள் ஆகியவற்றை தக்க ஜோதிட நிபுணர்களிடம் ஆலோசித்து மேற்கொள்வது நல்லது ஆகும்.
மேலும் படிக்க:Aadi Month 2023: ஆடி மாதம் எப்போது தொடக்கம்? ஆடி மாத பண்டிகைகள் என்னென்ன? எப்போது? - முழு விவரம்
மேலும் படிக்க: Aadi Month 2023: ஆடி மாதம் பிறந்தது எப்படி? வேப்பமரம் பூமிக்கு வந்தது எப்படி? புராணங்கள் சொல்வது இதுதான்..!