ட்ரம்புக்கு இந்தியா மேல அப்படி என்ன கோபம்? ஏன் வர்த்தக மோதல்? இதுதான் காரணங்கள்!
இந்தியா மீதான 50 சதவீத ஏற்றுமதி வரி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்ததற்கு என்ன காரணம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவுடன் வர்த்தகத்தில் மிகப்பெரிய உறவுடன் இருந்து வந்த அமெரிக்கா தற்போது இந்தியாவிற்கு மிகப்பெரிய தொல்லை தரும் நாடாக மாறியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு ஏற்றுமதி வரியாக 50 சதவீதத்தை விதித்திருப்பது பெரும் பொருளாதார சிக்கலை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்பின் கோபத்திற்கு காரணம் என்ன?
இந்தியாவில் இருந்து அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு மட்டும் ஆண்டுதோறும் 7.6 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், ட்ரம்பின் இந்த வரியால் வர்த்தகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அதிகமாக வரி விதித்துள்ள நாடே இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீதான ட்ரம்பின் இந்த கோபத்திற்கு காரணம் என்ன? என்பதை கீழே காணலாம்.
1. ட்ரம்ப் கருத்துக்கு பிரதமர் மோடி மறுப்பு:
இந்தியா - அமெரிக்காவின் மோதலுக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்தியா - பாகிஸ்தான் போரே ஆகும். பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரை தான் தலையிட்டே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வந்தார். அவரது கருத்துக்கு இந்திய வெளியுறவு மற்றும் மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்தபோதிலும் ட்ரம்ப் தானே போரை நிறுத்தினேன் என்று கூறினார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் தர அமெரிக்காவின் தலையீடு இதில் இல்லை என்று அவரே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மோடியின் இந்த திட்டவட்ட மறுப்பிற்கு அடுத்தநாளே அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத ஏற்றுமதி வரியை விதித்தது.
2. ரஷ்யாவுடனான நட்புறவு:
இந்தியாவிற்கு தொடக்க காலம் முதலே மிகப்பெரிய நட்பு நாடாக இருந்து வருவது ரஷ்யா ஆகும். இந்தியாவிற்கு உலகளவில் பல்வேறு நெருக்கடிகள் வரும்போது துணை நின்ற நாடு ரஷ்யா. கோவாவிற்கு போர்த்துக்கீசியா சொந்தம் கொண்டாடியபோது உள்ளிட்ட பல நெருக்கடியான தருணங்களில் ரஷ்யாவே துணை நின்றது. இதன் காரணமாகவே இந்தியாவில் யார் ஆட்சி வந்தாலும் ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்படுகின்றனர். மேலும், இந்திய பாதுகாப்பிலும் ரஷ்யா துணை நின்று வருகிறது.
இந்தியா - ரஷ்யாவின் நல்லுறவு பல வருடங்களாகவே அமெரிக்காவிற்கு கண்ணை உறுத்தி வந்தது. அந்த கோபத்தின் வெளிப்பாடாகவே ட்ரம்ப் தற்போது இந்தியா மீது தனது வெறுப்பை கக்கியுள்ளார். மேலும், இந்தியா தனது எரிசக்தியில் பெரும்பாலான பங்கை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வது அமெரிக்காவிற்கு அதிருப்தியாகவே இருந்து வருகிறது. சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு எரிசக்தியை வாங்குவதாகவும் ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி பொருட்களை இந்தியா வாங்குவதற்கு தண்டனையாகவும் இந்த வரி விதிப்பை ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். இந்தியா - ரஷ்யாவின் வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 68.7 பில்லியன் ஆகும். இந்திய கச்சா எண்ணெயில் 40 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு வருகிறது. இதுவும் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.
3. ப்ரிக்சை வில்லனாக பார்க்கும் ட்ரம்ப்:
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் எப்போதும் பனிப்போர் இருந்து கொண்டே இருக்கிறது. ப்ரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த ஒரு கூட்டமைப்பு ப்ரிக்ஸ். தொழில்நுட்ப மற்றும் ராணுவ பலம் வாய்ந்த தனது எதிரியான ரஷ்யா, மனித சக்தி மற்றும் தொழில்நுட்ப, ராணுவ பலம் நிறைந்த இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து இந்த கூட்டமைப்பில் இருப்பது அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை.
அமெரிக்கா அல்லாமல் உலகின் சக்திவாய்ந்த 3 நாடுகள் ஒன்றாக இருப்பது ட்ரம்ப்பிற்கு பிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. ப்ரிக்ஸ் மாநாட்டில் நடக்கும் பரிவர்த்தனைகள், பரிந்துரைகளை அமெரிக்கா உற்று நோக்கி வந்தது. இவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவது போலவும், டாலர் இல்லாத வர்த்தகத்தை இ்ந்த ப்ரிக்ஸ் கூட்டமைப்பு செயல்படுத்திவிடுமோ என்ற அச்சமும் அமெரிக்காவிற்கு இருந்து வருகிறது. இதுவும் ட்ரம்பின் கோபத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.
4. வேளாண்துறையில் உள்ளே வரத்துடிக்கும ட்ரம்ப்:
125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா உலக நாடுகளின் பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தை ஆகும். குறிப்பாக, விவசாயம். இந்தியாவின் பால் மற்றும் விவசாய சந்தையில் பல முறை முயற்சி எடுத்தும் இந்தியா அதற்கு ஒத்துழைக்கவில்லை. விவசாய துறையில் அமெரிக்காவின் முதலீடுகளை உள்ளே விடுவதால் இந்திய சிறு, குறு விவசாயிகள், பால்துறை கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும். இதன் எதிரொலியாகவும் இந்தியா மீது அமெரிக்கா வரியை விதித்துள்ளது.
5. நோபல் பரிசை குறிவைக்கும் ட்ரம்ப்:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவது மட்டுமில்லாமல் இந்தியா - பாகிஸ்தான் போர் விவகாரத்தில் தலையிட்டது, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த முயற்சிப்பது போன்ற விவகாரங்கள் மூலமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னை ஒரு அமைதியின் தூதராக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார். இதன்மூலமாக உலக நாடுகள் மத்தியில் தான் ஒரு அமைதியான தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்குவதன் மூலமாக அமைதிக்கான நோபல் பரிசை கைப்பற்ற மறைமுகமாக துடித்து வருகிறார். ஆனால், அவரது இந்த முயற்சிக்கு ரஷ்யாவைப் போலவே இந்தியாவும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
இந்த விவகாரங்கள் காரணமாக இந்தியா மீது கோபம் கொண்ட ட்ரம்ப் அதன் எதிரொலியாகவே 50 சதவீத வரியை இந்தியா மீது விதித்துள்ளார்.





















