உங்களுடைய கவலையை புரிந்துகொள்ள முடிகிறது.. மோடியிடம் நேரடியாக சொன்ன ரஷ்ய அதிபர் புதின்
உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைபாடு குறித்தும் கவலைகள் பற்றியும் அறிந்துள்ளதாகவும் இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைபாடு குறித்தும் கவலைகள் பற்றியும் அறிந்துள்ளதாகவும் இவை அனைத்தும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் கூறியுள்ளார்.
Uzbekistan | I know about your position on the conflict in Ukraine & also about your concerns. We want all of this to end as soon as possible. We will keep you abreast of what is happening there: Russian President Putin during a bilateral meet with PM Modi pic.twitter.com/TTqOhHnM5P
— ANI (@ANI) September 16, 2022
போரில் என்ன என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம் என்றும் புதின் இந்தியாவுக்கு உறுதி அளித்துள்ளார்.
உக்ரைன் போர் ஒன்பதாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்ச மாநாட்டுக்காக சமர்கண்டுக்கு சென்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பேசிய மோடி, போரை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என புதினுடன் கூறினார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததிலிருந்து முதல்முறையாக இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்து கொண்டுள்ளனர். உக்ரைனில் நடந்து வரும் போர் தொடர்பாக ரஷியாவின் முக்கிய கூட்டு நாடான சீனா கவலை தெரிவித்ததை புதின் ஒப்பு கொண்டதையடுத்து, பிரதமர் மோடியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
உக்ரைனில் பிப்ரவரியில் தொடங்கிய போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும், இந்தியாவுக்கு போர் குறித்து கவலைகள் இருப்பதை புரிந்து கொண்டதாகவும் புதின் இந்திய பிரதமரிடம் கூறினார். மேலும் பேசிய அவர், "துரதிர்ஷ்டவசமாக, எதிர்தரப்பான உக்ரைன் பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது. மேலும் போர்க்களத்தில் இராணுவ வழிமுறைகளின் மூலம் தனது இலக்குகளை அடைய அந்நாடு விரும்புகிறது" என்றார்.
உக்ரைனில் ரஷியப் படைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டுக்கு மத்தியில், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது படையெடுத்ததற்கு இந்தியா இதுவரை ரஷியாவை விமர்சிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியாவும் ரஷியாவும் பனிப்போர் காலத்திலிருந்தே நீண்டகால நட்புறவை கொண்டுள்ளன. மேலும், ரஷியா இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத சப்ளையராக உள்ளது.
இரு நாடுகளின் முக்கிய நலன்களுக்காக ரஷியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.