Turkey Earthquake : துரத்தும் துயரம்.. துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.5 ஆக பதிவு
துருக்கி இன்னும் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நிலநடுக்கத்திலிருந்தே மீளவில்லை. ஆனால் அங்கு இன்னும் நில அதிர்வுகள் ஓய்ந்தபாடில்லை.
துருக்கி இன்னும் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி நிலநடுக்கத்திலிருந்தே மீளவில்லை. ஆனால் அங்கு இன்னும் நில அதிர்வுகள் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் மத்திய துருக்கியில் இன்று மாலை 4 மணியளவில் ஒரு நிலநடுக்கம் பதிவானது. ரிக்டரில் 5.5 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்தியத் தரைகடல் சீஸ்மாலஜிக்கல் மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது.
துருக்கி-சிரியா நிலநடுக்கம்:
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி- சிரியா எல்லைப்பகுதியான காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில் 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின.
அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இந்த கட்டிட இடிபாடுகளில் பலரும் சிக்கிக்கொண்டனர். அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஐந்து முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பேரழிவில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த பாதிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. மக்கள் பலரும் வீடுகளை இழந்தனர்.
அடுத்தடுத்து புதிய நிலநடுக்கம்
ஒரு வழியாக 2 வார கால மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 21 ஆம் தேதி இரவு 8.04 மணிக்கு மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்படி, ஹடாய் மாகாணத்திற்கு தெற்குப் பகுதியில் துருக்கி-சிரியா எல்லைப் பகுதியான அனடோலுவில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 என பதிவானது. இதேபோல் 2வது நிலநடுக்கம் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். இந்நிலையில் இந்த இரண்டு நிலநடுக்கங்களில் உயிர்ப்பலி பதிவானது.
இந்நிலையில் இன்று பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கி நிலநடுக்க மீட்புப் பணியில் இந்தியா ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் பல்வெறு உதவிகளையும் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப் பணிகளை முடித்துத் திரும்பிய மீட்புக் குழுவினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது, நான் ஒரு தன்னார்வலராக உதவி செய்தேன், மக்களை மீட்பதில் எதிர்கொள்ளும் சிரமங்களை நான் பார்த்தேன் எனக் கூறினார்.
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கங்கள்: உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்க மண்டலங்களில் துருக்கியும் ஒன்று. கடந்த 1999 ஆம் ஆண்டு துருக்கியின் டுஸ்ஸே நகரில் 7.4 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். துருக்கி வரலாற்றில் தற்போதுவரை அதுதான் மோசமான நிலநடுக்கமாக அறியப்படுகிறது. அதன் பின்னர் 2020ல் எல்சாயிக் நகரில் 6.8 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தில் 40 பேர் பலியாகினர். கடந்த 2022 அக்டோபரில் ஏஜியன் கடற்கரையை ஒட்டி 7.0 ரிக்டரில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 114 பேர் கொல்லப்பட்டார். 1000 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் இதுவரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே துருக்கியின் மிக மோசமான நிலநடுக்கமாக உள்ளது.