IMF : ”உஷார்.. உலக நாடுகள் இதை சந்திக்கப்போகிறது..” : ஐஎம்எஃப் எச்சரித்து சொல்வது என்ன?
மார்ச் 31ஆம் முடிவடைந்த நிதியாண்டில் 8.7 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை இந்தியா எட்டியுள்ளது.
அடுத்தாண்டு, உலகம் முழுவதும் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, சர்வதேச நிதியம் இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ரஷிய - உக்ரைன் போரின் தாக்கம், உலகளவில் கடுமையான பணவீக்கம், உலகளவில் கடுமையாக்கப்பட்டு வரும் நாணய நிபந்தைனகள், தொற்றுநோயினால் ஏற்பட்ட நீடித்த விளைவுகள் காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஒட்டுமொத்த மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் அதன் வளர்ச்சி விகிதம் 6.8 விழுக்காடாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்று வரும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில், உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்: எதிர்கொள்ளப்படும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, மார்ச் 31ஆம் முடிவடைந்த நிதியாண்டில் 8.7 விழுக்காடு வளர்ச்சி விகிதத்தை இந்தியா எட்டியுள்ளது. ஐஎம்எஃப் அமைப்பால் ஜூன் 2022இல் வெளியிடப்பட்ட கணிப்பை ஒப்பிடுகையில் இந்தியாவின் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 0.6 சதவீத புள்ளிகளால் கீழ்நோக்கி திருத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் காலாண்டில் பலவீனமான உற்பத்தி மற்றும் வெளித் தேவைகள் குறைந்ததைத் தொடர்ந்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6.1% ஆக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து ஐஎம்எஃப் அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் ஒலிவியர் கௌரிஞ்சாஸ் பேசுகையில், "2022 ஆம் ஆண்டில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டில் மிகவும் வலுவான வளர்ச்சியைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கை விட அதிகமாக இருந்தது. நிதி மற்றும் பணவியல் கொள்கை அநேகமாக இறுக்கமாக்கப்படும். 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் பணவீக்கம் பணவீக்கம் சகிப்புத்தன்மைக்கு திரும்பும் என்று ஐஎம்எஃப் எதிர்பார்க்கிறது. கூடுதல் பண இறுக்கம் இதை உறுதி செய்யும்.
ஒட்டுமொத்த உலகிற்கு, 2021இல் 6.0% ஆக இருந்து 2022 இல் 3.2% ஆகவும், 2023 இல் 2.7% ஆகவும் வளர்ச்சி குறையும். இது 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருக்கத்தின் பிரதிபலிப்பாகும். இரண்டாம் பாதியில் யூரோ பகுதி சுருக்கம் கண்டு இருப்பது, சீனாவில் நீட்டிக்கப்பட்ட கொரோனா பரவல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொதுமுடக்கம் மற்றும் சொத்துத் துறை நெருக்கடி ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது" என்றார்.