(Source: Poll of Polls)
Trump Vs Hamas: காசா அமைதி ஒப்பந்தம்; ட்ரம்ப்புக்கு ஹமாஸ் வைத்த முக்கிய கோரிக்கை: அப்படி என்ன கேட்டாங்க.?
காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், பேச்சுவார்த்தையின்போது ட்ரம்ப்பிடம் ஹமாஸ் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளது. அது என்ன தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதித் திட்டம் குறித்து மத்தியஸ்தர்கள் முன்னிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் இறுதியில், முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹமாஸ், ட்ரம்ப் மற்றும் உத்தரவாதம் அளித்துள்ள மத்தியஸ்தம் செய்த நாடுகளிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு
காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக, ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்ட நிலையில், ஹமாஸ் அதில் சில அம்சங்களை மட்டுமே ஏற்பதாக ஏற்கனவே தெரிவித்தது. ஆனாலும், ஹமாஸ் இத்திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் உடன்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக அந்த அமைதித் திட்டம் குறித்து இரு தரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை மத்தியஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானதாக ட்ரம்ப் தற்போது அறிவித்துள்ளார். விரைவில் அவர் காசாவிற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட ஒப்பந்தத்தின்படி அடுத்து என்ன நடக்கும்.?
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான இந்த முதல் கட்ட ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலிருந்தும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் அமலுக்கு வந்த 72 மணி நேரத்தில் இந்த பிணைக் கைதிகள் பறிமாற்றம் நிகழும். அதன்படி, இஸ்ரேல் வசம் சிக்கியிருக்கும் சுமார் 2,000 பாலஸ்தீனியர்களும், ஹமாஸ் வசம் உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பிற்கு ஹமாஸ் வைத்த கோரிக்கை
முதல் கட்ட காசா அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு, ட்ரம்ப் மற்றும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டு உத்தரவாதம் அளித்துள்ள நாடுகளிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளது.
இஸ்ரேலை நம்ப மாட்டோம், ட்ரம்ப் தான் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ஏற்கனவே ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது, ட்ரம்ப் மற்றும் உத்தரவாதம் அளித்துள்ள மத்தியஸ்த நாடுகள், இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.
எகிப்தில் தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தை
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதல் கட்ட காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், ஹமாஸ் முன்பு திருத்தம் கேட்ட அம்சங்கள் மீது என்ன முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. குறிப்பாக, ஹமாஸ் நிராயுதபாணியாவது, எதிர்காலத்தில் காசாவை நிர்வகிப்பது யார் போன்ற அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஒப்புக்கொள்ளப்படாத அம்சங்கள் குறித்து எகிப்தில் தொடர்ந்து இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அதகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இஸ்ரேலும், ஹமாசும் ட்ரம்ப்பின் நிர்பந்தத்தாலேயே தற்போது ஒப்பந்தத்திறு வந்துள்ளனர். ஆனால், இது முறையாக அமல்படுத்தப்படாவிட்டால், மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. ஏனென்றால், முன்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் போதே, இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்தது. இதனால், தற்போது என்ன நடக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















