Twitter Blue Tick Subscription: நவம்பர் 29ஆம் தேதி முதல் மீண்டும் ப்ளூ டிக் பெறும் திட்டம்... எலான் மஸ்க் ட்வீட்!
பல பிராண்டுகள் மற்றும் நபர்கள் ஆள்மாறாட்டம் செய்து கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றதால் ட்விட்டரில் போலி கணக்குகள் கணிசமாக உயர்ந்தன
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக ப்ளூ டிக்குக்கு கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்தது, ட்விட்டர் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் அதிருப்தியில் இருந்த பல பயனர்கள் முன்னதாக மாஸ்டடோன், கூ உள்ளிட்ட பிற மைக்ரோ ப்ளாகிங் தளங்கள், சமூக வலைதள செயலிகளுக்கு மாறி வந்தனர்.
8 டாலர்கள் வரை செலுத்தி எவரும் வெரிஃபைட் அக்கவுண்ட் பெறலாம் எனும் திட்டம் அறிவிப்பட்ட நிலையில், அதன்படி இந்தியாவில் ப்ளூ டிக் வாங்குவதற்கு மாதம் ரூ.719 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
"பயனர்களின் உண்மை அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ப்ளூ டிக் முறைக்கு இனி மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு மாறும். அவ்வாறு கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் & தேடலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டுமே இருக்கும் வசதியும் இருக்கும். இந்த கட்டணம் மூலம் கிடைக்கும் வருமானம், சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதியாகவும் பகிர்ந்து அளிக்கப்படும்" என்று ட்விட்டர் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
மேலும் பிரபலங்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு official எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும், போலி கணக்குகளுக்கு parody எனும் பேட்ச் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மஸ்கின் இந்த அறிவிப்பு கடும் கண்டனங்களையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வந்த நிலையில், பல பிராண்டுகள் மற்றும் நபர்கள் ஆள்மாறாட்டம் செய்து கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றதால் ட்விட்டரில் போலி கணக்குகள் கணிசமாக உயர்ந்தன.
இதனையடுத்து கடந்த நவம்பர் 11ஆம் தேதி கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வெரிஃபைட் அக்கவுண்டை பெறும் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Punting relaunch of Blue Verified to November 29th to make sure that it is rock solid
— Elon Musk (@elonmusk) November 15, 2022
இந்நிலையில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி இந்த ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.