Mummy: 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மம்மி...பெருவில் குப்பைக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..!
கிமு 1500 மற்றும் 1000 க்கு இடையில் லிமா பள்ளத்தாக்குகளில் உருவான மஞ்சாய் கலாச்சாரத்தை சேர்ந்த மம்மியாக இருக்கலாம்.
பெருவின் தலைநகர் லிமாவில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் மம்மியை (பதப்படுத்தப்பட்ட உடல்) அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்த அகழ்வாராய்ச்சியாக கருதப்படுகிறது. சான் மார்கோஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மஞ்சாய் கலாச்சாரத்தை சேர்ந்த மம்மியா?
அப்போது, பருத்தி மூட்டை ஒன்றில் மண்டை ஓடு மற்றும் முடி துண்டுகளை கண்டிபிடித்துள்ளனர். இதுகுறித்து அகழ்வாராய்ச்சியாளர் மிகுவல் அகுய்லர் கூறுகையில், "கிமு 1500 மற்றும் 1000 க்கு இடையில் லிமா பள்ளத்தாக்குகளில் உருவான மஞ்சாய் கலாச்சாரத்தை சேர்ந்த மம்மியாக இருக்கலாம்.
இந்த மம்மி, சூரிய உதயத்தை நோக்கிய U-வடிவத்தில் கட்டப்பட்ட கோயில்களின் கட்டுமானத்துடன் தொடர்புடையது. கோயிலின் கடைசி கட்ட கட்டுமான பணிகளின்போது, நபர் ஒருவர் பலி கொடுக்கப்பட்டுள்ளார். இது, தோராயமாக 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்" என்றார்.
சோளம், கோகோ இலைகள் மற்றும் விதைகள் உட்பட உடலுடன் புதைக்கப்பட்ட பிற பொருட்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும், அந்த நபருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
துணியால் சுற்றப்பட்ட உடல்:
"வரலாற்றுச் சிறப்புமிக்க எச்சங்களைத் தேடும் பணி தொடங்கும் முன்பே, அந்த இடத்திலிருந்து எட்டு டன் குப்பைகளை அகற்றிவிட்டனர். அத்தகைய U- வடிவ கோயிலின் நடுவில் உள்ள ஒரு கல்லறையில் மம்மி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சாய் கலாச்சாரத்தின் சிறப்பியல்பு அம்சமான உடல் தட்டையாக அமைக்கப்பட்டது. பருத்தி மற்றும் காய்கறி நார்களால் செய்யப்பட்ட துணியால் உடல் சுற்றப்பட்டிருந்தது" என அகழ்வாராய்ச்சியாளர் மிகுவல் அகுய்லர் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளை கைப்பற்றும் நோக்கில் அமெரிக்காவிற்குப் ஸ்பெயின் நாட்டவர் பயணித்தனர். அந்த வகையில், அவர்கள் பெரு நாட்டுக்கு செல்வதற்கு முன்பு, பல்வேறு கலாசாரத்தில் உடல்கள் பதப்படுத்தப்படும் நடைமுறை இருந்திருக்கிறது. சில மம்மிகள் புதைக்கப்பட்டன. மற்றவை முக்கிய திருவிழாக்களின் போது வெளியே கொண்டு வரப்பட்டு மக்கள் முன்னிலையில் அணிவகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள்:
சமீபத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன. மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் , தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்தன.