ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்; கடலில் குதித்து வாலிபர் தற்கொலை - விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரம்: கோட்டகுப்பம் அருகே ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் அடைந்ததால் வாலிபர் கடலில் குதித்து தற்கொலை.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த சின்ன முதலியார் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் முத்துசாமி (31). இவர் நேற்று அதிகாலை நடைபயிற்சி செல்வதாக தனது மனைவி மகேஸ்வரி இடம் கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. இதனையடுத்து உறவினர்களுடன் மனைவி மகேஸ்வரி பல்வேறு இடங்களில் அவரைத் தேடியும் கிடைக்காததால் கோட்டகுப்பம் காவல் நிலையத்தில் முத்துசாமி காணவில்லை என புகார் அளித்தார்.
கோட்டகுப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தந்திராயன் குப்பம் கடற்கரை பகுதியில் நேற்று மாலை அவரது உடல் கரையில் மிதந்துள்ளது. சடலத்தினை மீனவர்களின் உதவியுடன் போலீசார் மீட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடலூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் முத்துசாமிக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் மீது அதிக ஈடுபாடு இருந்து வந்ததாகவும் தொடர்ச்சியாக ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக அளவு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிக அளவு கடன் சுமைக்கு ஆளான முத்துசாமி மன உளைச்சல் காரணமாக கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)