Crime: நகைக்கடையில் கவரிங் நகைகளை விற்க முயன்ற மோசடி கும்பல் - உள்ளே தள்ளிய போலீஸ்
விழுப்புரம்: மரக்காணம் நகைக்கடையில் கவரிங் நகைகளை விற்பனை செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் பர்தா அணிந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் வந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த நகைகளை விற்பதாக கூறி பணம் கேட்டுள்ளனர். இந்த கடையில் கடந்த பல மாதங்களுக்கு முன் பெண் ஒருவர் கவரிங் நகைகளை கொடுத்து பணம் பெற்று மோசடி செய்தார். எனவே உஷாரான அந்த நகைக்கடை உரிமையாளர், அந்த நகைகளை முறையாக பரிசோதனை செய்தாா். அப்போது நகைகள் அனைத்தும் 'கவரிங்' என தெரியவந்தது.
கவரிங் நகைகள்:
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர், மோசடி நபர்களை போலீசிடம் பிடித்துக் கொடுக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் நைசாக மரக்காணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். நகை விற்க வந்தவர்கள் சந்தேகப்படாதபடி இருக்க, அவர்களிடம் நகைகளின் எடை, எங்கு வாங்கியது, தற்போது அவசரமாக விற்பனை செய்வது ஏன்? என்று பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தார். நகைக்கடைக்காரர் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த மரக்காணம் போலீசார், அந்த மோசடி கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
நகைக்கடை அனுபவம்:
போலீசார் விசாரணையில் சென்னை வியாசார்பாடி என்.கே.டி. நகரை சேர்ந்த விஜயதாஸ் (வயது 47), பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (34), வியாசர்பாடியை சேர்ந்த வீரப்பன் மகள் தெய்வானை (27), சென்னை விநாயகபுரத்தை சேர்ந்த அருண்பாண்டியன் மனைவி விஜயலட்சுமி (25), பனையூர் பகுதியை சேர்ந்த சையத் (44) என்பது தெரியவந்தது. சையதும், விஜயதாசும் நண்பர்களான நிலையில், நகைக்கடையில் வேலை செய்த அனுபவத்தில் கவரிங் நகைகளை அச்சு அசலாக தங்க நகைபோல் செய்வேன் என்றும், அதை விற்று அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் விஜயதாஸ் கூறியுள்ளார். அதன்படி அவர்கள் கவரிங் நகைகளை கிராமப்புறங்களில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர்.
பின்னர் இந்த தொழிலை பெரிய அளவில் செய்யும் வகையில், மேலும் சிலரை தங்களுடன் சேர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இந்த மோசடியை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மோசடி கும்பலை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கவரிங் நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்