100 நாள் வேலை திட்ட நிதி குறைப்பு! குடிநீர் தட்டுப்பாடு: எம்பி ரவிக்குமார் போராட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் எந்த தொழில் வளர்ச்சியும் கிடையாது. தொழில் வளர்ச்சிகள் அனைத்தும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலோடு நின்றுவிடுகிறது.

விழுப்புரம்: 100 நாள் வேலை திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டது கண்டித்தும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட குடிநீர் தேவைக்காக திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ரவிக்குமார் தலைமையில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நூறு நாள் வேலை திட்டம் மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசை கண்டித்தும், திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த கோரியும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.
தமிழ்நாட்டிலேயே நிலம் இல்லாத கூலி செயலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம். கடந்த ஆண்டு 600 கோடி ரூபாய் அளவிற்கு வேலை செய்து ஊதியமாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மோடி அரசு தமிழ்நாட்டில் நூறுநாள் திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளனர். 81 லட்சம் மனித சக்திகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் 272 கோடிக்கு மட்டுமே வேலை செய்ய முடியும். ஏறத்தாழ 50 சதவீதம் அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட கோலியனூர், கானை பஞ்சாயத்துகளில் 70 ஆயிரம் குடும்பங்கள் இந்த நூறுநாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். 70 ஆயிரம் குடும்பத்தில் செங்காடு கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 20 நாள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் எந்த தொழில் வளர்ச்சியும் கிடையாது. தொழில் வளர்ச்சிகள் அனைத்தும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலோடு நின்றுவிடுகிறது.
ரூ.336 ஊதியம் என்றாலும் 200 ரூபாய் தான் மக்கள் கைக்கு செல்கிறது. மேலும் 336 ரூபாய் என்பது போதாது எனவே 500 ரூபாயாக வழங்க வேண்டும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு குடிநீரை கொண்டு வர திருவண்ணாமலை கூட்டு குடிநீர் திட்டம் 3310 கோடியில் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நிதி இல்லை என ஒன்றிய பாஜக அரசு கைவிரித்துவிட்டது.
இதனால் இரண்டு மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக விக்கிரவாண்டியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.





















